பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டம் குறித்த விழிப்புணர்வு வடமாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் குறைவாக இருப்பதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. 

மாத்ரு வந்தானா திட்டம் கருவுற்ற இந்திய குடியுரிமை பெற்ற அனைத்து பெண்களும் நல்ல ஊட்டசத்தினை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது. இது குறித்த விழிப்புணர்வு கிராமங்களை காட்டிலும் நகரத்தில் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு தெரியாமல் இருக்கிறது.  இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்துள்ளனர். கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மத்திய அரசின் சிறப்புத் திட்டமான பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட தொகையின் அளவு ரூ.4,000 கோடியைத் தாண்டியுள்ளது.

கருவுற்ற பெண்களின் ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்யவும், ஊதிய இழப்பில் ஒரு பகுதியை ஈடுசெய்யவும், அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தும் திட்டமான இது 01.01.2017-ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் கருவுற்றப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் மூன்று தவணைகளில் ரூ.5,000 ரொக்கப்பயன் பெறுவார்கள். தகுதியுள்ள பயனாளிகள் ஜனனி சுரக்ஷா திட்டத்தின்கீழ் ரொக்கமாக ஊக்கத்தொகையும் பெறுவார்கள். இதன்மூலம் ஒவ்வொரு மகளிருக்கும் சராசரியாக ரூ.6,000 கிடைக்கும்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்தியப் பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களும், தாத்ரா, நாகர்ஹவேலி யூனியன்பிரதேசமும் முதலிடத்தில் உள்ளன. இணைய அடிப்படையிலான மென்பொருள் பயன்பாட்டின் மூலம் மத்திய - மாநில அரசுகளால்  கண்காணிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 397 பெண்களும், புதுச்சேரி யூனியன்பிரதேசத்தில் 11 ஆயிரத்து 18 பெண்களும் இதுவரை பயனடைந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தை கணக்கிடுகையில் தமிழகத்தில் 50 சதவிகிதத்திற்கும் குறைவான பயனாளிகளே இந்த திட்டத்தில் பயன் பெற்றுவருவதால் அனைவரையும் இந்த திட்டத்தை தமிழகத்தில் கொண்டு சேர்க்க பிரதமர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.