பிட் இந்தியா இயக்கத்தின் முதலாம் ஆண்டு விழாவை  முன்னிட்டு பிட் இந்தியா உரையாடல் என்ற  தலைப்பில் நாடு முழுவதிலும் உள்ள உடல்நல ஊக்கம் அளிப்பவர்கள் மற்றும் உடல்நல ஆர்வலர்களுடன் பிரதமர் மோடி இன்று உரையாற்ற இருக்கிறார். இதில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

மத்திய அரசு தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா, யோகா தினம் என பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து அதை கடைப்பிடித்து வருகிறது. அந்த வரிசையில் பிட் இந்தியா என்ற  திட்டத்தின் முதலாம் ஆண்டு நிகழ்ச்சி இன்று மாலை டெல்லியில் நடைபெற உள்ளது. அதில் ஒவ்வொருவரும் தங்களது உடல் திறனை பாதுகாத்துக் கொள்ளவும், உடல் உறுதியை பேணும் வகையிலும், உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட உள்ளது. மேற்கண்ட நோக்கங்களுக்காவே இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

டில்லியில் இன்று நடக்கும் விழாவில் பிரதமர் மோடி உடற்பயிற்சி குறித்து உரையாற்ற இருக்கிறார். இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் உடல் உறுதியை பேணுவோம் என உறுதிமொழி எடுக்கப்பட உள்ளது.  நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் இந்த உறுதிமொழி எடுக்க வேண்டும் என அனைத்து பல்கலைகழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.  நாடு முழுவதிலும் இருந்து உடல் நல ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் வகையில் பிட் இந்தியா கலந்துரையாடல் இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. இந்த இணையதள உரையாடலின்போது பிரதமர் மோடி அதில் உடற்பயிற்சி  குறித்து உரையாற்ற இருக்கிறார்.  மேலும் அதில் உரையாட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, மலிந்து சோமன், ருஜுதா தவேகர் மற்றும் இன்னும் பல பிரபல உடல்நல ஊக்கம் அளிப்பவர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஒட்டுமொத்த நாடும் கொரோனாவில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ள நிலையில், மேலும் பல்வேறு நோய்களுக்கும் மக்கள் ஆளாகி வரும் நிலையில், உடற்பயிற்சி மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது, ஆரோக்கியமாக வாழ்வே சிறந்த செல்வம் என்பதை வலியுறுத்தும் வகையில், பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அதேபோல், அவருடன் கலந்துகொள்ளும் பிரபலங்களும், உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி பேச உள்ளனர். எளிமையான முறையில் உடல் நலத்தைப் பேணுவது, ஆரோக்கியத்துடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதன் அவசியத்தை நாட்டுமக்களுக்கு வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பிட் இந்தியா உரையாடல் என்ற தலைப்பில் இன்று பிரதமர் பிரபலங்களுடன் உரையாட உள்ளார். உடற்பயிற்சி மற்றும் உடல் நலத்தை பேணுவதை ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத அங்கமாக ஆக்குவதே இந்த உரையாடலின் நோக்கம் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வரும் இத்திட்டத்தின் மூலம் ஏராளமான மக்கள் இதில் இணைந்து பயனடைந்து உள்ளதுடன், இதுவரை 3.5 கோடிக்கும் அதிகமானோர் இதில் கலந்து கொண்டு இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.