அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு என தவறான செய்தி வெளியிட்ட தமிழ் ஊடகங்கள் உளவுத்துறை கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்த நிலையில் தமிழ் ஊடகங்களில் முன்னிலையில் இருக்கும் புதிய தலைமுறை, நியுஸ் 7 மற்றும் நியுஸ் 18 ஆகிய ஊடகங்கள் பிரதமரின் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு என்று அமெரிக்கா செல்வதில் தாமதம் என்றும் பிரேக்கிங் நியுஸ் வெளியிட்டன.

அதிலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதமரின் விமானம் ஜெர்மனியின் பிராங்பர்ட்டில் தரையிறங்கியதாகவும் அந்த ஊடகங்கள் செய்திகளை ஒளிபரப்பின. இதனால் தமிழகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமரின் விமானத்திலேயே தொழில்நுட்ப கோளாறா என்று பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் இந்த செய்தி தேசிய ஊடகங்கள எதிலும் ஒளிபரப்பாகவில்லை. இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. உடனடியாக இந்த தகவல் உளவுத்துறை மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கும் தமிழக தரப்பில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதமர் அலுவலகம் பிராங்க்பர்ட்டை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதாக சொல்கிறார்கள்.

அப்போது தான் தெரிந்தது பிரதமர் மோடியின் விமானம் டெக்னிக்கல் ஹால்ட்டாக பிராங்க்பர்ட்டில் நிறுத்தப்பட்டிருப்பது. இதனை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டிருந்தது. டெக்னிகல் ஹால்ட் என்பது நீண்ட தூரம் விமானத்தில் செல்லும் போது எரிபொருளை நிரப்ப மற்றும் தொழில்நுட்ப ரீதியில் விமானம் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய மேற்கொள்ளப்படும் ஒரு வழக்கமான நிகழ்வு.

இதனை தொழில்நுட்ப கோளாறு என தவறாக புரிந்து கொண்டு தமிழகத்தின் 3 முன்னணி ஊடகங்கள் தவறான தகவலை பிரேக்கிங் நியுசாக ஒளிபரப்பியுள்ளன. இதனை அடுத்து இந்த செய்தி ஒளிபரப்பில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்றுஉளவுத்துறை விசாரித்து வருகிறது. ஏனென்றால் ஒரே நேரத்தில் மூன்று தொலைக்காட்சிகள் ஒரே மாதிரி தவறான தகவல்களை ஒளிபரப்பியது எப்படி என்பது தான் உளவுத்துறையின் சந்தேகத்திற்கு காரணம்.

மேலும் பிரதமர் மோடியின் விமானப்பயணம் தொடர்பாக தவறான தகவல்களை தமிழ் ஊடகங்கள் ஒளிபரப்பிய விவகாரம் உள்துறை அமைச்சகம் மற்றும் தொலைக்காட்சி சேனல்களை கட்டுப்படுத்தும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.