prime minister modi attack congress

காங்கிரஸ் கட்சி தனது பொய்களால் நாட்டை பிரித்து வைத்து இருக்கிறது. இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே பிளவை உண்டாக்கி, சண்டையை ஏற்படுத்தி இருக்கிறது என்று குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக குற்றம்சாட்டினார்.

2-ம் கட்ட தேர்தல்

குஜராத் மாநிலத்தில் 89 தொகுதிகளுக்கு நேற்று முதல் கட்ட தேர்தல் நடந்தது. 2-ம் கட்ட தேர்தல் வரும் 14-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 

மகிசாகர் மாவட்டத்தில் உள்ள லூனாவாடா நகரில் நேற்று நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மக்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது-

பிரிவினை

இந்த நாட்டை இத்தனை ஆண்டுகளாக ஒரு குடும்பத்தினர்தான் பிரித்து வைத்து இருக்கிறார்கள். சகோதரர்களாக இருக்க வேண்டிய இந்துக்களையும், முஸ்லிம்களையும்ஒருவொருக்கு ஒருவர் சண்டை போடும் நிலையில் உள்ளனர்.

பொய்யான வாக்குறுதி

காங்கிரஸ் கட்சி என்னை அவமானமாகப் பேசி வருகிறது. அவர்களுக்கு என்னை அவதூறாகப் பேசுவது என்பது, குஜராத் மக்களை அவமானப்படுத்துவது போன்றது என அவர்களுக்குத் தெரியவில்லை. முஸ்லிம் மக்களுக்கு இட ஒதுக்கீடு தருகிறேன் என பொய்யான வாக்குறுதிகளைக் காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது என்றார்.

சர்ச்சை கேள்வி?

சமீபத்தில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சல்மான் நிஜாமி டுவிட்டரில் சில கேள்விகளை மோடிக்கு எதிராக எழுப்பி இருந்தார். அதில், “ ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் நாட்டுக்காக உயிர்தியாகம் செய்தவர், பாட்டி இந்திரா காந்தி நாட்டுக்காக உயிர் நீத்தவர், கொள்ளுதாத்தாஜவஹர்லால் நேரு நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர். உங்களின் தந்தை யார்?, உங்களின் தாத்தா யார்?’’ எனக் கேட்டு இருந்தார்.

மோடி பதிலடி

இதற்கு பதில் அளித்து பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் பேசுகையில், “ காங்கிரஸ் தலைவர்சல்மான் நிஜாமி என் தாய், தந்தை யார் எனக் கேட்டு, மேலும், பல கேள்விகளையும் எழுப்பி இருந்தார். காஷ்மீருக்கு சுயாட்சி கொடுக்க வேண்டும் என்றும், நமது ராணுவத்தினர் பெண்கள் பலாத்காரம் செய்பவர்கள் என்றும் டுவிட் செய்துள்ளார். இப்படிப்பட்ட மனிதர்களை மக்கள் எப்படி ஏற்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் அப்சல் குரு போன்ற மனிதர் தேவை என்கிறார்.

நாட்டுக்காக

 என்னுடைய ஏழ்மையான குடும்பத்தையும், என் தாய், தந்தை யார் எனக் கேட்டு கிண்டல் செய்து என்னை அவமானப்படுத்தும் காங்கிரஸ் கட்சிக்கு சொல்ல விரும்புவது எல்லாம், எனக்கு இந்த நாடுதான் எல்லாமே. என் ஒவ்வொரு மணித்துளியும் நாட்டுக்காவும், 125 கோடி மக்களுக்காகவும் அர்பணித்து வருகிறேன்’’ என பதில் அளித்தார்.