இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை கடந்துவிட்டது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 507லிருந்து 519ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன.

இந்தியாவை பொறுத்தமட்டில் மகாராஷ்டிராவில் தான் பாதிப்பு கடுமையாக உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு   4 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. அதற்கடுத்தபடியாக டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகவுள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவந்தாலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. இதுவரை 16 பேர் மட்டுமே கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில், தமிழ்நாட்டு மருத்துவர்களின் தீவிர முயற்சி மற்றும் சிகிச்சையால் 411 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தமிழ்நாட்டில் கடந்த 4-5 நாட்களாக கொரோனா பரிசோதனை முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே 36 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்துள்ளன. இவற்றில் 24 ஆயிரம் தமிழ்நாடு ஆர்டர் செய்து நேரடியாக வாங்கியவை. 12 ஆயிரம் மத்திய அரசு கொடுத்தவை. 

ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் பரிசோதனை முடிவுகளை விரைவில் பெற முடியும் என்பதால், குறைந்த காலத்தில் அதிகமானோரை பரிசோதிக்க இந்த ரேபிட் டெஸ்ட் கருவி உதவியாக இருக்கும். அந்தவகையில் ஏற்கனவே மத்திய அரசிடமிருந்து கூடுதல் ரேபிட் டெஸ்ட் கருவிகளை தமிழக அரசு கேட்டுவருகிறது.

இந்நிலையில், கூடுதல் ரேபிட் டெஸ்ட் கருவிகளை வழங்கவேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று இரவு 7.30 மணியளவில் பிரதமர் மோடி, தொலைபேசி வாயிலாக, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாட்டின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனையை மேலும் தீவிரப்படுத்தி அதிகமானோருக்கு டெஸ்ட் செய்ய ஏதுவாக, அதிகமான ரேபிட் டெஸ்ட் கருவிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு, அதிகமான ரேபிட் டெஸ்ட் கருவிகளை வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்ததாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.