பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்த விவகாரத்தில் விரிவாக விசாரணை நடத்தி தவறிழைத்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் மத்திய அரசின் பிரதமர் கிசான் திட்டத்தில் 13 மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாத 5.5 லட்சம் பேர்களை முறைகேடாக சேர்த்து ரூ.120 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதை தமிழக வேளாண்துறை செயலாளர் ககந்தீப் சிங் பேடி உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக 80 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக வேளாண்துறை செயலாளரின் இந்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த முறைகேட்டுக்கு பின்னால் ஆளும் ஆளுங்கட்சியினரின் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

கடந்த ஆண்டு மக்களவை தேர்தல் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பாக, பிரதமர் நரேந்திர மோடியால் பிப்ரவரி 24, 2019 அன்று தேர்தலை மையப்படுத்தி பிரதமர் கிசான் திட்டம் தொடங்கப்பட்டது. வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதற்கு முன்பாகவே வாக்காளர்களை முதல் தவணை சென்றடைவதை உறுதி செய்வதற்காக இத்திட்டம் முன்னதாகவே செயல்படுத்தப்பட்டது. முன்னதாக மத்திய அரசால் மிகப்பெரும் அளவில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் ஊழல், முறைகேடுகளுக்கு வழிவக்கும் வகையிலேயே அமைந்துள்ளன. ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கழிவறை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தில் கழிவறை கட்டாமலேயே முறைகேடு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்காமலேயே முறைகேடு, தற்போது பிரதமர் கிசான் திட்டத்தில் போலியான விவசாயிகள் பெயரில் முறைகேடு என ஊழல், முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையிலேயே மத்திய அரசின் திட்டங்கள் அமைந்துள்ளன. 

மத்திய அரசின் இதுபோன்ற திட்டங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கும் திட்டம் என்பதால், திட்டத்திற்குள் வராத தவறான பயனாளர்களின் பெயர்களை போலியாக சேர்த்து சில தனியார் இசேவை நிறுவனங்கள் மூலம் முறைகேடுகள் நடந்துள்ளன. இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். மத்திய அரசின் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்தி மத்திய அரசின் உதவித் திட்டங்களை, வீட்டு லோன்களை பெற்றுத் தருவதாக கூறி பாஜகவினர் பல்வேறு மாவட்டங்களிலும் பிராச்சாரங்களில் ஈடுபட்டனர். ஆகவே, இந்த கிசான் திட்டத்தின் கீழ் உண்மையான விவசாயிகளின் வயிற்றில் அடித்து, போலியான நபர்களை இணைத்து மிகப்பெரும் அளவில் நடைபெற்ற முறைகேட்டின் பின்னால் பாஜகவினர் உள்ளனரா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. எனவே, இதுகுறித்தும் தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் தமிழகத்தில் 13 மாவட்டத்திலேயே ரூ.120 கோடி வரை முறைகேடு நடந்திருந்தால், மற்ற மாவட்டங்களிலும் இதுதொடர்பாக விரிவாக விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் முறைகேடுகள் வெளியாகும். ஆகவே, இந்த முறைகேடுக்கு காரணமான அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உள்பட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுகொள்கின்றேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.