President to attend the event in tamil nadu
சென்னை மற்றும் வேலூரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று காலை தமிழகம் வந்து சேர்ந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வரவேற்றனர்.

பின்னர், சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக அவர் வேலூர் புறப்பட்டுச் சென்றார்.
அவரது பயண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:-
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வரும் 4-ஆம் தேதி காலை சென்னை வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஹெலிகாப்டர் மூலமாக வேலூர் செல்கிறார். அங்கு ஸ்ரீபுரம் தங்கக் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்குகிறார்.
சாலை மார்க்கமாக, வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரிக்கு செல்கிறார். கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். இதன்பின், வேலூர் அரசினர் விடுதியில் ஓய்வெடுக்கும் அவருக்கு அங்கு மதிய உணவு அளிக்கப்படுகிறது.
அதன்பின், வேலூரில் உள்ள ஸ்ரீநாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்துக்குச் செல்லும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சிறுநீரக மாற்று மற்றும் இருதய அறுவைச் சிகிச்சைப் பிரிவு கட்டடத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஸ்ரீபுரம் தங்கக் கோயிலுக்குச் சென்று ஸ்ரீலட்சுமி நாராயணி தேவியை வழிபடுகிறார். வேலூரில் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு, ஹெலிகாப்டர் மூலமாக சென்னை திரும்புகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
சென்னையில் நிகழ்ச்சிகள்: சென்னையில் ஆளுநர் மாளிகையில் மே 4-ஆம் தேதி இரவு தங்கும் அவர் மறு நாள் (மே 5) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். சென்னை பல்கலைக்கழகத்தின் 160-வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். அதன்பின், வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரிக்குச் சென்று அங்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலையரங்கம் உள்ளிட்ட கட்டடங்களைத் திறந்து வைக்கிறார். மே 5-ஆம் தேதி பிற்பகலில் சென்னை விமான நிலையம் செல்லும் அவர் அங்கிருந்து தனி விமானம் மூலம் தில்லி புறப்பட்டுச் செல்கிறார்.
