president election..1581 criminals will be voted
நாளை நடைபெற உள்ள ஜனாதிபதி தலைவர் தேர்தலில் வாக்களிக்க உள்ள 4 ஆயிரத்து 852 எம்.பி., எம்.எல்.ஏ.க்களில், 33 சதவீதம் பேர், அதாவது, ஆயிரத்து 581 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இதில் வாக்களிப்பவர்களில் 75 சதவீதம் கோடீஸ்வரர்கள் என்றும், ஒட்டுமொத்தமாக பெண்களின் பங்கு என்பது வெறும் 9 சதவீதம்தான் எனவும் தெரியவந்துள்ளது.
இந்திய குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை 25ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் நாளை (ஜூலை 17) நடைபெற உள்ளது. அன்றே நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரும்,தொடங்குகிறது.
இதில் நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்குப்பதிவில் மக்களவை, மாநிலங்கள் அவை எம்.பி.க்களும், 28 மாநில, 2 யூனியன் பிரதேச சட்டசபைகளில் நடக்கும் வாக்குப்பதிவில் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க இருக்கறார்கள். இதில் மொத்தம்10,98,903 மதிப்புள்ள வாக்குகள் பதிவாக உள்ளன.
இந்நிலையில், ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வௌியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது-
ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்கள் அனைத்து மாநில, யூனியன் பிரதேச எம்.எல்.ஏ.க்கள் என 4 ஆயிரத்து 852 பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 33 சதவீதம் பேர் அதாவது ஆயிரத்து 581 எம்பி, எம்.எல்.ஏ.க்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
கிரிமினல் வழக்குகள்
இதில் மக்களவையில் உள்ள 543 எம்.பி.களில் 34 சதவீதம் பேர், அதாவது 184 பேர்மீதுகிரிமினல் வழக்குகளும், மாநிலங்கள் அவை எம்.பி.க்களில் 19 சதவீதம் அதாவது 44 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எம்.எல்.ஏ.க்களில்ஆயிரத்து 353 பேர் அதாவது 33 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
மேலும், வாக்களிக்கும் 20 சதவீதம் பேர் மீது மிக மோசமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக 993 பேர் மீது மிகமோசமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் மக்களவை எம்.பி.களில் 177 பேரும், மாநிலங்கள் அவை எம்.பி.க்கள்16 பேரும் அடங்குவர்.
அவர்களில் ராஷ்ட்ரிய ஜனதா தள எம்பி ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ், எம்பிமொஹம்மது என்கிற ஹுசைன் ஆகியோரும் அடங்குவர்.
கோடீஸ்வர எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்
குடியரசுத் தலைவரை தேர்வு செய்யப் போகும் 4,852 பேரில் 75 சதவீதம் பேர் அதாவது 3ஆயிரத்து 460 எம்பி, எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள். அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
இதில் மக்களவையில் உள்ள 543 எம்.பி.க்களில் 84 சதவீதம், 445 பேர் கோடீஸ்வரர்கள். மாநிலங்களவை எம்.பி.க்களில் 84 சதவீதம் அதாவது 194 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். 4,078எம்.எல்.ஏ.க்களில் 68 சதவீதம் பேர், 2 ஆயிரத்து 721 பேர் கோடீஸ்வரர்கள். ஒட்டுமொத்தமாக கோடீஸ்வர எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து8,18,703 வாக்குகள் அதாவது 75 சதவீதம் பதிவாக உள்ளது.
மாநிலங்களைப் பொருத்தவரை கர்நாடக எம்.எல்.ஏ.க்களில் 92 சதவீதம் பேர் கோடீஸ்வர்கள். இவர்களிடம் இருந்து 30 ஆயிரத்து 400 வாக்குகள் பதிவாக உள்ளது.
பெண்கள் வெறும் 9 சதவீதம்...
தேர்தலில் வாக்களிக்க இருக்கும் 4852 பேரில் வெறும் 9 சதவீதத்தினர் மட்டுமே அதாவது 451 பேர் மட்டுமே பெண்கள். நாடாளுமன்றத்தின் மக்களவையில் 12 சதவீதம் மட்டுமே பெண் உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களவையில் 10 சதவீத பெண் உறுப்பினர்கள்தான் உள்ளனர்.
சட்டப்பேரவை என்ற அளவில் எடுத்துக் கொண்டால் உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் தான் அதிக பெண்கள் வாக்களிக்கப் போகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து மேற்கு வங்கமும், மத்தியப் பிரதேசமும் உள்ளது. நாகாலாந்து மாநிலத்தைப் பொறுத்தவரை ஒரு பெண் எம்பி, எம்எல்ஏ கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
