வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவில் ஸ்லீப்பர் செல்களா செயல்பட்ட எம்.பி.களுக்கு மீண்டும் போட்டியிட சீட்டு வழங்கப்படமாட்டாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

 ஆளும் அதிமுகவில் நாடாளுமன்றத் தேர்தலில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இருந்தபோதும், அதை தாண்டி மேலிட பிரமுகர்களைப் பிடித்து சீட்டு பிடிக்க பலரும் காய் நகர்த்திவருகிறார்கள். இதில் தற்போதைய எம்.பி.கள் சிலரும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

கடந்த தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக வென்றது. ஆனால், பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைத்ததால், அமைச்சர் பதவி என்பதே அதிமுக எம்.பி.களுக்கு கனவாகிபோனது. ஆனால், இந்த முறை தமிழகத்திலிருந்து அதிக மத்திய அமைச்சர்கள் வர வேண்டும் என மோடி விரும்புகிறார் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்த பிறகு, பலரும் தேர்தலில் வெற்றி பெற்று, பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற கனவில் இருக்கிறார்கள்.

இதன் காரணமாகவும் அதிமுக-பாமக-பாஜக-தேமுதிக என மெகா கூட்டணி அமைத்தாலும் தேர்தலில் போட்டியிட தற்போதைய எம்.பி.க்கள் பலரும்  ஆர்வம் காட்டிவருகிறார்கள். ஆனால், தற்போதைய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் வாரிசுகள் சீட்டு கேட்டு அதிமுக தலைமையை நெருக்கிவருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில் தினகரனின் ஸ்லீப்பர் செல்களாக செயல்பட்ட எம்.பி.களுக்கு கல்தா கொடுக்க அதிமுக தலைமை திட்டுமிட்டுவருவதாக தகவள் வெளியாகி உள்ளது.

தினகரனை அதிமுகவிலிருந்து ஒதுக்கி வைத்த பிறகு 10-க்கும் மேற்பட்ட எம்.பி.கள் அவர் பக்கம் இருந்தார்கள். பின்னர் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்-இபிஎஸுக்கு கிடைத்த பிறகே அதிமுகவுக்கு திரும்பினர். மேலும் சில எம்பிக்கள் அதிமுகவில் இருந்தபடியே தினகரன் பாசத்துடன் இருந்ததையும் கட்சி தலைமை பட்டியல் தயாரித்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.  இந்த எம்.பி.களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக அதிமுக தலைமை கழக வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

அதேவேளையில் தங்களுடைய ஆதரவு எம்.பி.களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றும் பேசப்படுகிறது. இதனால், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத எம்.பி.களும் தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் என கூறப்படுவோர் என்ன செய்வார்கள் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. தொகுதி உடன்பாடு நிறைவடைந்தபிறகு உடனடியாக வேட்பாளர்களை அறிவிக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது.