அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளில் ப்ரீபெய்டு மின்சார மீட்டர் வைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார்.

தென்மண்டல எல்.பி.ஜி எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாமக்கல் பொம்மைகோட்டைமேட்டில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மழைக்காலங்களில் மின் தடை தொடர்பாக வரும் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. மின் வயர் அறுந்து கிடந்தாலோ, துண்டிக்கப்பட்டாலோ, மின்வாரியத்துக்கு பொதுமக்கள் உடனே தெரிவிக்க வேண்டும். 

மழைக்காலம் என்பதால் முன்னெச்செரிக்கையுடன் இருக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ப்ரீபெய்டு மின்சார மீட்டர் குறித்து கேள்வி எழுப்பிய போது, அரசின் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

மேலும், குழந்தை சுர்ஜித்தை மீட்கும் முயற்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், சுஜித் மரணத்தை வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்து வருகிறார். அதிமுகவில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் வரலாம் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.