பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் தேமுதிக சார்பில் மதுரை தொகுதியில் பிரேமலதா போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மதுரை தொகுதியை பல சில ஆண்டுகளாக குறிவித்துள்ள பாஜக விட்டுக் கொடுக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. 

தேமுதிக கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்று இருந்தது. பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். அதன் பிறகு கூட்டணியில் இருந்து விஜயகாந்த் ஒதுங்கினார். தற்போது பாராளுமன்ற தேர்தல் வருவதால் விஜயகாந்த் கட்சியை மீண்டும் கூட்டணியில் சேர்க்க முயற்சி நடக்கிறது. இப்போது அதிமுக- பாஜக இடையே கூட்டணி அமைய இருப்பதால் தேமுதிகவுக்கு தனியாக தொகுதிகள் ஒதுக்க அதிமுக தரப்பில் முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கடலூர் ஆகிய 5 தொகுதிகளில் 4 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் சேர மறுத்துன் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்டது. அதன் பிறகு இந்த கூட்டணி கட்சிகள் பிரிந்து விட்டன. விஜயகாந்துடன் கூட்டணி வைத்த வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகள், திமுக கூட்டணியில் உள்ளன. 

தனியாக இருக்கும் தேமுதிக இந்த முறை அதிமுக- பா.ஜனதா கூட்டணியில் இடம் பெறுவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலில் பிரேமலதாவை வேட்பாளராக அறிவிக்க தேமுதிக திட்டமிட்டுள்ளது. அவர் மதுரை தொகுதியில் போட்டியிடுவார் என்றும், அவருக்கு மதுரை தொகுதியை விட்டுக் கொடுக்க அதிமுக தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக முடிவு செய்துள்ளது.

மதுரை விஜயகாந்துக்கு சொந்த ஊர் அங்குதான் அவர் அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதால் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் ஆதரவுடன் மதுரையில் பிரேமலதா போட்டியிட விரும்புவதாக தேமுதிக வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பாஜக சார்பாக மதுரை தொகுதியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் களமிறங்கத் திட்டமிட்டு வருகிறார். அதற்காகவே மதுரையில் எய்ம்ஸ் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் பாஜக, பிரேமலதாவுக்கு மதுரை தொகுதியை விட்டுத்தருமா? என்பது கேள்விக்குறியே..!