மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. தூதுவர் ரஜினிகாந்த் ஆகியோர் வரிசையில் ம.தி.மு.க. தலைவர் வைகோவும் கேப்டன் விஜயகாந்தின் ‘உடல் நலம்’ விசாரிக்க வந்துவிடுவாரோ என்று அவரது குடும்பத்தினர் அச்சத்தில் இருப்பதாக  தே.மு.தி.க. வட்டாரங்கள் அதே  தெரிவிக்கின்றன.

தே.மு.தி.க.வின் தேர்தல் கூட்டணி இன்னும் முடிவை எட்டாத நிலையில் அவரது உடல்நலம் விசாரிக்கும் சாக்கில் மேற்படித் தலைவர்கள் எட்டிப்பார்த்த சங்கதியை இன்று மதியம் பத்திரிகையாளர் சந்திப்பில் போட்டு உடைத்தார் பிரேமலதா விஜயகாந்த்.

இந்த நிலையில் மதுரையில் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது வைகோவை உசுப்பி விடும்வகையில்  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். விஜயகாந்தை நீங்களும் சென்று சந்திப்பீர்களா என்று வைகோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டும் என்பது தான் தனது முதல் விருப்பம் என்றார். மேலும் விஜயகாந்தை தானும் சந்திக்க விரும்பியதாகவும்... என்றபடி பதிலை பாதியில் முடித்துக்கொண்டார்.

இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது ஸ்டாலின், ரஜினி ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து திரும்பியவுடன் சூட்டோடு சூடாக வைகோவும் விஜயகாந்தை சந்திக்க விரும்பி அவரது மைத்துனர் சுதீஷைத் தொடர்பு கொள்ள, சுதீஷோ தனது சகோதரி பிரேமலதாவிடம் தகவலைச் சொல்ல, பதறிப்போன பிரேமலதா, ‘அய்யோ அவரா நான் கையெடுத்துக் கும்பிட்டு வரவேணாம்னு சொல்லு’ என்றாராம்.