அ.தி.மு.க.வின் கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க.வுக்கு அவர்கள் கேட்ட எண்ணிக்கையிலும், அவர்கள் கேட்ட இடங்களையும் அதிகளவில் ஒதுக்காமல் இம்சை செய்கிறது ஆளுங்கட்சி. இதனால் கூட்டணிக்குள் குழப்பம் உருவாகி இருக்கிறது!- என்று ஏஸியாநெட் தமிழ் இணையதளம் முதலிலேயே சொல்லியிருந்தது. அது தெளிவாக உறுதியாகி இருக்கிறது இந்த உள்ளாட்சி தேர்தலின் பிரசார பொழுதுகளில். 

தமிழகத்தில் இருக்கும் ஊரக உள்ளாட்சி  பதவிகளில் இருபது சதவீதத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும்! என்று தே.மு.தி.க. தரப்பு எதிர்பார்த்தது. கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் இந்த முடிவை சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோர் முதல்வரும், அ.தி.மு.க. கூட்டணியின் தலைவருமான எடப்பாடியாரை சந்தித்து வைத்தனர். அவரும், அதை கேட்டுவிட்டு, தங்களின் அந்தந்த மாவட்ட செயலாளர்களோடு, தே.மு.தி.க.வின் மா.செ.க்களை சந்தித்து பேசி உரிய வகையில் இடங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். 

சுதீஷ் இதை தங்களின் நிர்வாகிகளுக்கு சொன்னார். தே.மு.தி.க.வின் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பெரும் நம்பிக்கை, மகிழ்ச்சியுடன் ஆளுங்கட்சியின் நிர்வாகிகளை சந்தித்தனர். துவக்கத்தில் நட்பு முகமுடன் துவங்கிய தொகுதிப் பங்கீடு ஒரு கட்டத்தில் முறுக்கிக் கொண்டு நிற்க துவங்கியது. தே.மு.தி.க.வினர் கேட்ட எண்ணிக்கையிலும் ஒதுக்கவில்லை, கேட்ட இடங்களையும் ஒதுக்கவில்லை. 

அ.தி.மு.க.வின் தலைமை அறிவித்திருக்கும் எண்ணிக்கையில் கூட பல மாவட்டங்களில் ஊரக நிர்வாக பதவிகளுக்கான சீட்களை ஆளுங்கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஒதுக்கவில்லை. மேலும் ஒதுக்கிய இடங்களிலும் பணம் தரமுடியாது, பிரசாரத்துக்கு வர முடியாது! என கறார் கண்டிஷன் போட்டு கண்ணீர் விட வைக்கின்றனராம். 

தே.மு.தி.க. ஒரு நலிந்து போன கட்சி. அக்கட்சி பீக்கில் இருந்த போது அதன் நிர்வாகியாவதற்கு பெரும் போட்டி போட்டனர் உறுப்பினர்கள். ஆனால் இன்றோ கூப்பிட்டு கொடுத்தாலும் பதவியை ஏற்க மறுக்கின்றனர். காரணம் கட்சிக்காக பணத்தை அள்ளி இறைத்து பலர் ஓட்டாண்டிகளாகிவிட்டனர். அதனால் பணமில்லாத அந்த நபர்கள், பசையான அ.தி.மு.க. தங்களுக்காக செலவு செய்யும் என நினைத்து ஏமாந்து போயுள்ளனர். இந்த ஏமாற்றத்தை கழக தலைமையிடம் அவர்கள் சொல்லியும் எந்த ரியாக்‌ஷனும் இல்லையாம்.

’எங்களுக்கு நீங்க ஒதுக்கியிருக்கிற குறைஞ்ச இடங்களுக்கு செலவுக்கு காசு கொடுங்க. நீங்க நிக்குற அத்தனை தொகுதியிலும்  எங்க கட்சியின் வாக்கு வங்கியை முழுமையா உங்களை ஆதரிக்க வைக்கிறோம்!’ என்று ஆளுங்கட்சியினரிடம் தே.மு.தி.க.வினர் கதறுகின்றனராம். 

ஆனால் அவர்களோ ‘ஒண்ணும் பிரச்னையில்லை. நீங்க நிக்குற இடங்கள்ள உங்க செலவை நீங்க பாருங்க. எங்கே எப்படி ஜெயிக்கணும்னு எங்களுக்கு தெரியும்.’ என கெத்தாக ஒதுக்குகின்றனராம் அ.தி.மு.க.வினர். 

தே.மு.தி.க.வின் நிலையே இப்படி என்றால், வாசனின் த.மா.கா.வின் நிலையை நினைத்தால் ரத்தக் கண்ணீர் வருகிறது, அந்தோ பாவம். 
தமிழகத்தில் பெரும் செல்வாக்குடையை விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வை இப்படி ஆளுங்கட்சி நடுத்தெருவில் இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கிறதே!  சீட் எண்ணிக்கை, தொகுதி, தேர்தல் செலவு, பிரசாரம் என எல்லாவற்றிலும் ஏமாற்றுகிறார்களே! இதை தலைமைக்கு சொன்னால் இ.பி.எஸ்.ஸும் கண்டுக்க மாட்டேங்கிறாரே? என்று கடும் கோபத்தில் இருக்கிறாராம் பிரேமலதா. 
ஆங்!