தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா சுறுசுறுப்பாக கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் பணமும் அக்கட்சிக்குள் தாரளமாக புழங்க ஆரம்பித்துள்ளதால் நிர்வாகிகள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு இருக்கும் இடம் தெரியாமல் சென்றுவிட்டது தே.மு.தி.க. இந்த நிலையில் கேப்டன் உடல்நிலையும் சரியில்லாமல் போனதால் தே.மு.தி.கவின் செல்வாக்கு அதள பாதாளத்தில் இருந்தது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எந்தகட்சியும் தே.மு.தி.கவை கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் தான் தே.மு.தி.க பொருளாளராக பிரேமலதா பதவி ஏற்றார். 

பதவி ஏற்ற மறுநாளே நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை கூட்டினார் பிரேமலதா. அதன் பிறகு தினமும் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், மகளிர் அணி, தொழிலாளர்கள் அணி, வழக்கறிஞர் அணி, விவசாயிகள் அணி, நெசவாளர்கள் அணி என ஒவ்வொரு அணியின் நிர்வாகிகளையும் அழைத்து கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் பிரேமலதா ஆலோசித்து வருகிறார். இந்த கூட்டத்திற்கு நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்கிறார்கள்.

 

கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் பிரேமலதாவின் அழைப்பை ஏற்று கோயம்பேடு கட்சி அலுவலகத்திற்கு வந்துவிடுகின்றனர். இதற்கு காரணம் நிர்வாகிகளை பிரேமலதாவே நேரடியாக தொலைபேசி மூலம் அழைப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இன்றி வந்து போகும் செலவுத் தொகையும் கூட கட்சியில் இருந்து கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

மேலும் முக்கிய நிர்வாகிகளுக்கு கணிசமான அளவில் தொகை ஒதுக்கப்பட்டு கூட்டத்திற்கு அனைவரையும் வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பிரேமலதாவின் சுறுசுறுப்பும் தே.மு.தி.க நிர்வாகிகளை உற்சாகம் அடைய வைத்துள்ளது. தினமும் காலை பத்து மணிக்கு கட்சி அலுவலகம் வரும் பிரேமலதா பிரச்சனைகளுக்கு தீர்வு, நிர்வாகிகள் நியமனம் என்று பரபரப்பாக இயங்குகிறார். மேலும் பிரேமலதாவின் பேச்சும் மிகவும் தெளிவாக இருப்பதால் நிர்வாகிகளுக்கு அவர் மீது நம்பிக்கை வந்துள்ளது. 

இதனால் சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகள் திரும்பிச் செல்லும் போது உற்சாகத்துடன் செல்கிறார்கள். பணப்புழக்கம் என்பது இருந்தால் தான் கட்சி உயிர்ப்புடன் இருக்கும் என்கிற ரகசியத்தை பிரேமலதா தெரிந்து கொண்டதால் இடைத்தேர்தலில் அந்த கட்சி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.