சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகிவருகின்றன. தேமுதிகவும் தேர்தலுக்காக தயாராகிவருகிறது. அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, கட்சி நிர்வாகிகளிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திவருகிறார். விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசுகையில், “தொண்டர்கள் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். விஜயகாந்த் கிங் ஆக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.” என்று தெரிவித்தார்.


தேமுதிக தனித்து போட்டியிட தொண்டர்கள் விரும்புவதாக பிரேமலதா கூறியதன் மூலம். அக்கட்சி அதிமுக கூட்டணியில் ஈடுபடுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் பிரேமலதா ராமநாதபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் தனித்து போட்டியிட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். தனித்து போட்டியா அல்லது கூட்டணியா என்பது குறித்து ஜனவரி மாதத்தில் விஜயகாந்த் அறிவிப்பார். மத்திய அரசின் செயல்பாடுகள் போதுமான அளவுக்கு இல்லை. அதிமுக ஆட்சியும் நிறைகளும் பல குறைகளும் இணைந்த ஆட்சியாக உள்ளது” என்று பிரேமலதா தெரிவித்தார்.