நாட் ரீச்சபளில் பிரேமலதா..! நெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்..! தவிக்கும் கேப்டன் தொண்டர்கள்..!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கு இந்த மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு கூடுதல் அவகாசம் கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. ஆனால் கடந்த முறையே கூடுதல் கால அவகாசம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் வழக்கம் போல் திக்கு தெரியாமல் தேமுதிக தொண்டர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கு இந்த மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு கூடுதல் அவகாசம் கேட்டு தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. ஆனால் கடந்த முறையே கூடுதல் கால அவகாசம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அந்த வகையில் அவகாசம் கிடைக்கவில்லை என்றால் இந்த மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனை முன்கூட்டியே உணர்ந்த திமுக ஏற்கனவே மாவட்ட அளவில் செயல்வீரர்கள் கூட்டத்தை போட்டு முடித்துவிட்டது.
அதிமுகவும் கூட அவர்களுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் பணிகள் ஜரூராகவே நடைபெற்று வருகின்றன. இதே போல் காங்கிரசும் கூட இதுவரை இல்லாத அளவில் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாக வருகிறது. இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்த பிரேமலதா திடீரென கேப்டன் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றுவிட்டார். முதலில் கேப்டன் மட்டுமே சென்ற நிலையில் பிரேமலதா இங்கு இருந்ததால் தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கவலை இல்லாமல் இருந்தனர்.
ஆனால் இப்படி எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்கிற நிலையில் திடீரென பிரேமலதா துபாய் சென்றது கட்சி நிர்வாகிகளுக்கே ஷாக்காக அமைந்துள்ளது. இதற்கு காரணம் திமுகவுடன் நடத்திய உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பதால் தான் என்கிறார்கள். அதாவது சுமார் 10 சதவீத இடங்களை தேமுதிக கேட்டதாகவும் சரி போய் வாருங்கள் என்று திமுக தரப்பு தேமுதிகவை அனுப்பி வைத்துவிட்டதாகவும், அதன் பிறகு தேமுதிகவிற்கு திமுக தரப்பில் இருநது எந்த அழைப்பும் இல்லை என்கிறார்கள்.
இதனால் நொந்து போன பிரேமலதா, விஜயகாந்தின் உடல்நிலையை காரணம் காட்டி துபாய் சென்றுவிட்டதாக சொல்கிறார்கள். மேலும் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை மாவட்டச் செயலாளர்களிடம் பொறுப்பை கொடுத்துவிட தேமுதிக திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். அதாவது சுருக்கமாக சொல்லப்போனால் உள்ளாட்சித் தேர்தலை தேமுதிக புறக்கணித்துவிடும் என்றே சொல்கிறார்கள். நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு இந்த 9 மாவட்டங்களை டீலில் விட தேமுதிக மேலிடம் முடிவெடுத்துவிட்டதாகவும் இந்த தகவல் கசிந்து திமுகவுடன் கூட்டணி கனவில் இருந்து நிர்வாகிகள் அலறிப்போய் கிடப்பதாகவும் சொல்கிறார்கள்.