2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் பொருளாளார் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தேமுதிக 20-ம் ஆண்டு கொடி நாள் விழாவையொட்டி அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் 118 அடி உயர கொடிக் கம்பத்தில் தேமுதிக கட்சி கொடியை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் பங்கேற்று கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசினார்.

 
‘‘இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் எத்தனை எத்தனையோ முதல்வர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாருமே விஜயகாந்த் கொள்கையைத்தான் கடைபிடிக்கிறார்கள். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி வீடுதேடி ரேஷன் எனும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். டெல்லியில் கெஜ்ரிவால் லஞ்சத்தை ஒழிக்கும் பாலிசியை கடைபிடித்து மீண்டும் முதல்வராகியுள்ளார்.
இதுபோன்ற ஆயிரக்கணக்கான திட்டங்களை மக்களுக்கு விஜயகாந்த் ஆட்சிக்கு வந்திருந்தால் கொடுத்திருப்பார். ஆனால், மக்கள் ஒரு வாய்ப்பு கொடுத்தார்களா? இன்றைக்கு இந்தியா முழுவதுமே மொழி, சாதி, மதத்தால் மக்களை துண்டாடுகிறார்கள். நாலாபுறம் சூழ்ச்சி, துரோகம் இருந்தாலும் தேமுதிக வெற்றி நடைபோடுகிறது. தேமுதிக தலைவர் முதல்வராக வந்தால் இந்தியாவில் தமிழகத்தை வல்லரசாக மாற்றுவார். எனவே, மாற்றத்தை நோக்கி பயணிப்போம். எங்கள் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. கூட்டணி தர்மத்தை முழுக்க கடைபிடிப்பவர் கேப்டன். அதுபோல அனைத்து கட்சிகளும் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக ஆட்சியைப் பிடிக்கும்” என்று பிரேமலதா தெரிவித்தார்.