ஐபேக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற போவதாக அறிவித்துள்ளது திமுக தலைமை. கடந்த இரு தினங்களாக இதைப்பற்றியே சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் வெற்றிக்காக என்னவெல்லாம் செய்யப்போகிறது என ஆராய்ந்தால் அதிமுக- பாஜகவுக்கு அதிர்ச்சி ஏற்படும். 

பார்ப்பனர் பிரஷாந்த் கிஷோர் என்று திமுகவை வைத்து கலாய்த்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் ஐபேக் வலைதளத்தை மேய்ந்ததில் அதுவொரு மிகப்பெரிய நெட் ஒர்க்கை அமைத்து வெற்றியை உருவாக்குவதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது. திமுக வெற்றி பெறுவதற்கு 80 சதவிகிதம் வெற்றி வாய்ப்பினை நேரடியாகவும், மறைமுகமாகவும் உருவாக்கித் தருகிறது.

 

முதல் விஷயம் இங்கு சமூக வலைதளங்களையும், சமூகத்தையும் கவனிக்கின்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருவதற்கான வேலை வாய்ப்பை அளித்திருக்கிறது. தற்காலிகப் பணி என்றாலும் புதுவிதமான கவர்ச்சியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தும். ஆர்வம் குறைகின்ற போது தேர்தல் முடிந்திருக்கும். ஏனெனில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஐபேக் நிறுவனம் அமைத்த வியூகப்பணிகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வரை பணி செய்தனர். ஒவ்வொரு பூத்திலும் கிட்டத்தட்ட 11 தன்னார்வலர்கள் பணியாற்றினர். தன்னார்வலர்கள் என்றும் செல்வாக்குள்ளவர்கள் என்றும் content writerகள் என்றும் அழைக்கப்பட்டாலும் தனித்தனியாக முறையான ஊதியம் வழங்கப்படுவது இதன் சிறப்பு.

திருமங்கலம் ஃபார்முலா மாதிரி பணமும், பொருளும் அள்ளி வீசவேண்டியதில்லை. மூளைச்சலவை செய்ய ஏதுவானவர்களுக்கும், நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கும் சரியான அளவில் செலவளித்தால் போதுமானது. 2000 ஒரு ஓட்டுக்கு என்று அளித்து அதில் 1000 பாக்கெட்டுக்கு போவது போன்ற ஊழல் இதில் கிடையாது.

இந்த பணிகளில் பெருந்திரளாக இளைஞர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள். மோடியுடைய Manthan நிகழ்வு, ஜெகன் அண்ணா பிலுபு போன்றவை ஒருங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு சான்று. கிராமங்களில் நிதிஷ் குமாருக்கு நடத்திய சைக்கிள் பிரச்சாரங்கள் மாதிரி பாமரர்கள் கவனிக்கக் கூடிய நிகழ்வுகளை நடத்த வாய்ப்புண்டு.

ஏற்கெனவே கொஞ்சநாள் முன்பு அட்மின் ஐடிகளை கொண்டு பதிவுகளும் வீடியோக்களும், மீம்களும் report செய்யப்பட்டு முடக்கும் மாதிரி முயற்சிகள் நடந்தன. அதை இனி அலுவல் ரீதியாக செய்வதற்கான பணிகள் நடக்கும். எல்லா கட்சிகளிலும் இருக்கும் செல்வாக்குள்ளவர்கள் பெயரில் ட்ரெண்டிங் சூட்சுமத்தை அறிவார்கள். அது மோடி முதன்முறையாக பிரதமர் ஆகும்போது பிரஷாந்த் கிஷோர் உருவாக்கிய நிலைப்பாடு. ஆனால் மோடி அதை சாமர்த்தியமாக உபயோகப்படுத்திவிட்டு விட்டுவிட்டார். பிறகு அத்தனை செல்வாக்குள்ளவர்களும் அதே பாணியை உபயோகப்படுத்தத் துவங்கி இன்றுவரை ட்ரெண்டிங் மாயையிலிருந்து நாம் விடுபடவில்லை.

அமெரிக்க பாணி தேர்தல் வழிகாட்டிய பேக் நிறுவனங்களின் தேர்தல் பணி பாணிகளை நம் ஊருக்கு ஏற்றாற்போல வளைத்து திருத்தி அளிப்பதே ஐபேக் நிறுவனத்தின் அடிப்படை நோக்கமாகும். பஞ்சாப்பில் ஜீ நியூஸ் உடன் இணைந்து பணியாற்றியது ஐபேக். தமிழ்நாட்டில் ஏற்கெனவே "நாங்க இருக்கோம்" என்று தமிழக செய்தி ஊடகங்கள் திமுகவுக்கு வேலை பார்க்கின்ற நிலையில் ஊடகங்களை விடவும் முக்கியமான நிலைப்பாடு ஒன்றை ஐபேக் செய்யப்போகின்றது. இதுவரை ஐபேக்கின் தோல்வி என்பது உத்திரப்பிரதேசத்தில் மட்டும்தான்.

திமுக, ஐபேக் நிறுவனத்தை professional ஆக உபயோகப்படுத்தும் நிலையில் திமுகவின் எதிர்த்தரப்பாக நின்றிருக்கும் பாஜக மாநிலத்தலைவரே இல்லாமல் அமைந்திருக்கிறது. ஆளுங்கட்சி அதிமுக இப்படியான வியூகங்களில் கவனம் செலுத்துவது அவசியம். ஏற்கெனவே இருக்கின்ற நியூஸ் ஜே சேனலில் மாற்று சித்தாந்தம் கொண்டவர்களும், மாற்றுக்கட்சியை சார்ந்தவர்களும் அதிகரித்து வருகின்றனர். அதிமுக மற்ற கட்சிகள் மாதிரி கிடையாது. தொண்டர்களும், தலைவர்களுடன் சேர்ந்து உழைத்து வளர்த்த கட்சி. Campaign professionalகளுக்கு எதிர்த்தரப்பாக நிற்க இன்னும் பலமடங்கு பலம் தேவை என புரிந்து செயலாற்ற வேண்டும். 

தமிழக பாஜகவினருக்கு பிரசாந்த் கிஷோரை பற்றிய புரிதல் என்னவென்று தெரியவில்லை. அதிமுகவினரும் ஐபேக் நிறுவனத்தை விளையாட்டுத்தனமாக நினைத்து விடக்கூடாது. இப்போதே திமுகவுக்கு எதிரான சம்பவங்களின் அத்தனை டேட்டாக்களையும் ஐபேக் நிறுவனம் அழகாகத் திரட்டி ப்ளூ பிரிண்டை உருவாக்கியிருக்கும். ஆனால் அதிமுக தொண்டனுக்கு பிரசாந்த் கிஷோர் எளிய போஜ்புரி பிராமணராக மட்டுமே அறியப்படுவார் என்பதில் இருக்கிறது விளையாட்டின் தொடக்கம். எனவே திமுகவின் எதிர்த்தரப்பு professionalஆக தங்களை பலப்படுத்திக்கொள்கிற அவசியத்தில் இருக்கிறது என்பதை திமுக சாராத ஒவ்வொருவரும் உணர்ந்தாக வேண்டும்’’எனக் கூறுகிறார்கள்.