தமிழக மக்கள் மீது திமுக-விற்கு தணியாத அக்கறையை மூலதனமாக்கித்தானே ஆரூரார் குடும்பம் ஆசிய பணக்காரர்கள் ஆச்சு என மருது அழகுராஜ் ஒரு பதிவை போட்டு திமுகவை திணறடித்து இருக்கிறார்.

 

தமிழக மக்கள் மீதான தணியாத அக்கறையில் தி.மு.க செயல்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தூத்துக்குடி பகுதியில் ரேஷன் அரிசியை நிவாரணமாக கொடுத்து திமுக எம்.எல்.ஏ செய்த தில்லாலங்கடி வெளிச்சத்துக்கு வந்தது. அதாவது, தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் உள்ள போல்டன்புரத்தில் சிலருக்கு கோரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதியை மாவட்ட நிர்வாகமும் முழுமையாக தடை செய்தது. இதனால், அங்கு வசிப்பவர்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. போல்டன்புரத்தில் உள்ள மக்கள் சிலர் வாட்ஸ்- அப் வழியாக உதவி கேட்டு பதிவு செய்தனர். இவர்களுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் திமுக எம்.எல்.ஏ.,வுமான கீதாஜீவன் அப்பகுதிக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்தார். 

அப்பகுதியில் வசிக்கும் தினக்கூலி தொழிலாளர்கள் ஆதரவற்றவர்கள் ஆகியோர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு கம்பெனி பெயருடன் பேக்கிங் செய்யப்பட்ட தலா 10 கிலோ அரிசியை எம்.எல்.ஏ., கீதாஜீவன் மற்றும் திமுகவினர் வழங்கினர். திமுக எம்.எல்.ஏ., சார்பில் வழங்கப்பட்ட  அரிசி பையை வீட்டிற்கு வந்து பிரித்துப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் ரேஷன் அரிசியை பாலீஷ் செய்து பிராண்டட் பேக்கிங் செய்தது தெரியவந்தது. 

இந்த தகவலை சிலர் அதே வாட்ஸ்அப் வழியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது திமுகவுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க குடியுரிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் பறக்கும் படை தாசில்தார் என்று அவ்வப்போது நடவடிக்கையில் இறங்குவார்கள். ரேஷன் பொருள்கள் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவது கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள் இப்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., ஒருவர் வழங்கி அரிசியே ரேசன் அரிசி ஆக இருந்தது குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து திமுகவினரிடம் பேசியபோது, ‘’கட்சிக்கு இப்போது ஆலோசனை வழங்கிவரும் பிரசாந்த் கிஷோரின் அறிவுரை அடிப்படையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் இப்படி உதவிகள் செய்து வருகின்றனர். ஆனால், ஏழை மக்களுக்கும், திமுகவின் நலிந்த தொண்டர்களுக்கும் வழங்கிய அரிசி பையில் ரேஷன் அரிசி இருந்தது, கீதா ஜீவனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படி இது நடந்தது என்று தெரியவில்லை. இது தூத்துக்குடி மக்களிடையே திமுகவின் செல்வாக்கை பஞ்சர் ஆகிவிட்டது என்று கூறுகின்றனர் என்கிற செய்தி வெளியானது.

 

இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நமது அம்மா நாளிதழின் ஆசிரியரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான மருது அழகுராஜ், ‘’
தமிழக மக்கள் மீது திமுக-விற்கு தணியாத அக்கறையாமே.. ஆமாமா.. இருக்காதா பின்னே, அந்த அக்கறையை மூலதனமாக்கித்தானே ஆரூரார் குடும்பம் ஆசிய பணக்காரர்கள் ஆச்சு. தொண்டூழியத்தை ஃபண்டூழியமாக்கிய அந்த துப்புக்கெட்டத்தனத்துக்கு பதச்சோற்று சான்று இதோ தூத்துக்குடியில்..! 
வெட்கம்.. வெட்கம்.. எனப் பதிவிட்டுள்ளார்.