நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இதனால் 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் பாஜக-வை எதிர்த்து களம் காண முடியுமா என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

பாஜக Vs காங்கிரஸ் :

காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலான தலைவர்கள் நம்பிக்கை இழந்த நிலையில் காணப்படுகின்றனர். இதனால் ஒருபுறம் ஆம் ஆத்மி கட்சியும், மற்றொரு புறம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸின் இடத்தைப் பிடிக்க போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் பெற்ற வெற்றியை வரும் காலத்தில் நடைபெறும் தேர்தல்களிலும் தக்க வைக்க பாஜக திட்டமிடுகிறது. 

வரும் டிசம்பர் மாதம் குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான தேர்தல் பணிகளை பாஜக ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி, சில நாட்களிலேயே பிரதமர் மோடி குஜராத்தில் மாபெரும் பேரணியில் கலந்து கொண்டார். தேர்தல் பணிகளை பாஜக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத்தை பாஜக கவுரவ பிரச்சினையாகவும் பார்க்கிறது.

குஜராத் தேர்தலில் பலப்பரீட்சை :

இந்த 5 மாநில தேர்தல் தோல்வி காங்கிரஸை மோசமாகப் பாதித்துள்ளது. காங்கிரஸ் தலைமை குறித்த கேள்விகள் அதிகரித்துள்ள நிலையில், வரும் காலத்தில் தேர்தலை எதிர்கொள்ளும் திட்டங்களிலும் காங்கிரஸ் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த 2017 குஜராத் தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களில் வென்ற நிலையில், இந்த முறை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைப் பொருத்து தான் பார்க்க வேண்டும். 

இந்தச் சூழலில் குஜராத் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவது தொடர்பாகத் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் தேர்தலை மட்டுமே இரு தரப்பும் இணைந்து எதிர்கொள்ளும் என்றும் அடுத்து வரும் காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் இந்த ஒப்பந்தம் தொடராது என்றும் கூறப்பட்டுள்ளது.

இப்போது குஜராத் தேர்தலில் காங்கிரஸுக்காக பிரசாந்த் கிஷோர் பணியாற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பாஜகவை எதிர்த்து பிரசாந்த் கிஷோர் தீட்டும் வியூகம் எடுபடுமா ? என்று கேள்வி எழுந்துள்ளது.