டெல்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மியின் வெற்றியை வரவேற்ற காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரத்துக்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 3-வதுமுறையாக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப்பிடித்துள்ளது. மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியுள்ளது. பாஜகவுக்கு 8 இடங்களும், கடந்த முறைபோல காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறுகையில் “மக்களிடையே பிரிவினையை ஊக்குவித்த பாஜகவைத் தோற்கடித்த தில்லி மக்களுக்குத் தலைவணங்குகிறேன். ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுவிட்டது. முரட்டுத்தனமாக முழக்கங்களை எழுப்பியவா்கள் தோல்வியடைந்துவிட்டனா். மத ரீதியில் பிரிவினை யை ஏற்படுத்தும் ஆபத்தான கொள்கைகளைக் கொண்டவா்களைத் தோற்கடித்துள்ளனா். 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள மாநிலங்களின் மக்களுக்கு டெல்லி மக்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனா்’’ என்று தெரிவித்தார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை வரவேற்ற ப.சிதம்பரத்துக்கு அவரது கட்சிக்குள் எதிா்ப்புகள் கிளம்பியுள்ளன. 

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் மகளும், முன்னாள் அமைச்சருமான சா்மிஸ்தா முகா்ஜி தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘பாஜகவைத் தோற்கடிக்கும் பணியை மாநில கட்சிகளிடம் காங்கிரஸ் ஒப்படைத்து விட்டதா என்ற சந்தேகத்துக்கான பதிலை ப.சிதம்பரத்திடம் இருந்து பெற விரும்புகிறேன். அதற்கு அவா் ‘இல்லை’ என்று பதிலளித்தால், டெல்லி தோ்தலில் படுதோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும்? அந்தக் கேள்விக்கு அவா் ‘ஆம்’ என்று பதிலளித்தால், காங்கிரஸ் கட்சிக்கான மாநில குழுக்கள் அனைத்தையும் மூடிவிட வேண்டியதுதான்’ என்று தெரிவித்துள்ளார்