குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்…சட்டப் பேரவை தாக்குதல் குறித்து விளக்கம்

தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற தாக்குதல் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து புகார் அளிக்க உள்ளார்.

தமிழக சடட்டப் பேரவையில் கடந்த சனிக்கிழமை எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனறு திமுக, காங்கிரஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் சபாநாயகர்தனபால் இதற்கு அனுமதி தராததால் திமுக வினர் அமளியில் ஈடுபட்டனர்.இதனையடுத்து தனபால் அவையை ஒத்திவைத்தார்.பின்னர் மீண்டும் அவை கூடிய போதும் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்களை அவையை விட்டு வெளியேற்ற தனபால் உத்தரவிட்டார்.பின்னர் அவைக் காவலர்கள் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை குண்டுகட்டாக வெளியேற்றினர். அப்போது ஏற்பட்ட மோதலில் ஸ்டாலின் மற்றும் சில எம்எல்ஏக்களின் சட்டைகள் கிழிக்கப்பட்டன.மேலும் சிலர் காயமடைந்தனர்.

இது குறித்து ஸ்டாலின் உடனடியாக ஆளுநரிடம் புகார் அளித்தார். இந்நிலையில் சட்டப் பேரவையில் நடைபெற்ற இந்த வன்முறை குறித்து நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஸ்டாலின் புகார் அளிக்க உள்ளார். அன்று மாலை ஆறரை மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

மேலும் திமுக. எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் ஸ்டாலின் வழங்குகிறார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியை எதிர்த்து,நாளை தமிழகம் முழுவதும் திமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.