pranab mugherjee is going to participate in rss function
ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் கண்டிப்பாக பங்கேற்று எனது கருத்தை அந்த கூட்டத்தில் பதிவு செய்வேன் என முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்தோடு பாஜக செயல்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைக்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் தீவிரம் காட்டிவருகிறது.
பாஜகவிற்கும் காங்கிரஸிற்கும் இடையே கடுமையான கருத்து மோதல்கள், பரஸ்பரம் விமர்சனங்கள் ஆகியவை வலுத்துள்ள நிலையில், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் கலந்துகொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு வரும் 7-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகிறார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்திருந்தாலும், அவர் குடியரசு தலைவராக இருந்ததால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவராகிவிட்டார்.
எனினும் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி கலந்துகொள்ள கூடாது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் பகிரங்கமாக வலியுறுத்தினர். இதுதொடர்பாக பேசிய மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி, ஆர்.எஸ்.எஸ் ஒரு மதவாத, பிரிவினைவாத இயக்கம். அந்த அமைப்பு குரித்து பிரணாப் எதிர்மறையான கருத்துகளை பேசியுள்ளார். இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதன் மூலம் தனது முந்தைய கருத்துகள் தவறானவை என்று பிரணாப் கருதுகிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், ஜாபர் ஷெரீப் உள்ளிட்டோரும் பிரணாப் ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியபோது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அழைப்பை பிரணாப் ஏற்றுக்கொண்டுள்ளார். அந்த அமைப்பின் கொள்கைகளில் எது தவறு என்பது குறித்து கூட்டத்தில் பிரணாப் பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வங்கமொழி நாளிதழுக்கு பேட்டியளித்த பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது என கடிதங்கள், கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அவற்றுக்கு நான் இதுவரை பதிலளிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் நிச்சயமாக பங்கேற்பேன். நான் சொல்ல விரும்புவதை அந்த கூட்டத்தில் கண்டிப்பாக பதிவு செய்வேன் என பிரணாப் தெரிவித்தார்.
அதனால் பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
