2009-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி தனது ஆட்சிக் காலத்தில் 'பிரஜா தர்பார்' என அழைக்கப்பட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை அப்போதைய முதல்  அமைச்சர்  அலுவலகம் அமைந்திருந்த ஐதராபாத்தில் நடத்தி வந்தார். 

ஒய்.எஸ்.ஆர். வழியினை பின்தொடர்ந்து அவரது மகனும் தற்போதைய ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சருமான  ஜெகன்மோகன் ரெட்டி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்துள்ளார். 

இந்த கூட்டம் அமராவதி மாவட்டத்தில் தடப்பள்ளியில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் நாள் தோறும் காலை 8 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'பிரஜா தர்பார்' கூட்டத்தில் பொது மக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் மனுக்களை நேரடியாக முதல் மந்திரியிடம் வழங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதால் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.