புதிய கல்விக்கொள்கையின் ஒரு‌‌ கூறான மும்மொழி கொள்கையைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தமாட்டோம் எனும் தமிழக முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தள்ளார்.  இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர் தமிழக முதல்வரை வெகுவாக பாராட்டி வரவேற்றுள்ளார்.  

மத்திய அரசு நடைமுறைப்படுத்த உள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் முதலமைச்சர் சார்பில் அறிக்கை  ஒன்று வெளியானது. அதில்,  தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர். இதுதொடர்பாக பல கட்டங்களில் தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். 

பேரறிஞர் அண்ணா அவர்கள், தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரும் இருமொழிக் கொள்கையை  கட்டிக் காத்து வந்தனர். எனவே இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியைத் திணிக்க கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளோம். மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் வழியில் நடக்கும் இந்த அரசு, இந்தி திணிப்பை ஆணித்தரமாக எதிர்த்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இருமொழிக் கொள்கையையே கடைபிடிப்போம் என உறுதிபட தெரிவித்து, அம்மாவின் அரசு மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில், முன்மொழி கல்வி இடம்பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. 

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று மத்திய அரசு அறிவித்த மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்து அந்தந்த மாநிலங்கள் தங்களின்  கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என பாரதப் பிரதமர் அவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், முதலமைச்சரின் இந்த உறுதியான முடிவை தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் பாராட்டி வரவேற்றுள்ளார்.  இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக முதலமைச்சரின் முடிவை வரவேற்று ட்விட்டரின் கருத்து பதிவிட்டுள்ளார் அந்த பதிவில்: புதிய கல்விக்கொள்கையின் ஒரு‌‌ கூறான மும்மொழி கொள்கையைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தமாட்டோம் எனும் தமிழக முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன்!

மாநிலங்களின் தன்னாட்சி கல்வியுரிமைகளை மொத்தமாய் பறித்து மத்தியில் அதிகாரங்களைக் குவித்து ஒற்றைப்பாடத்திட்டத்தின் மூலம் தேசிய இனங்களின் வரலாற்றை மறைக்கும் ஒற்றைமயக் கல்விக்கொள்கையை மொத்தமாய் எதிர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். என பதிவிட்டுள்ளார். தமிழக முதல்வரின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியில் கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.