என்னை போன்றே பழனிசாமி ஆதரவு மற்ற எம்.எல்.ஏக்களும் தினகரனுக்கு ஆதரவு அளிப்பார்கள் என கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமியை ஆட்சி கட்டிலில் இருந்து தூக்கி எறிய துடிக்கும் தினகரன், தனக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்கும் 18 எம்.எல்.ஏக்கள் அல்லாமல், தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பழனிசாமிக்கு ஆதரவாக ஸ்லீப்பர் செல்களாக இருப்பதாகவும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அவர்கள் வெளிவருவர் எனவும் தினகரன் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாகவே ஒரு ஸ்லீப்பர் செல் வெளிவந்துவிட்டார். முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக இருந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, தினகரன் இல்லத்தில் அவரை சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ பிரபு, மக்கள் ஆதரவு இல்லை எனக்கூறி தினகரனையும் சசிகலாவையும் கட்சியிலிருந்து ஒதுக்கினர். ஆனால் மக்கள் ஆதரவு தினகரனுக்குத்தான் உள்ளது என்பதை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிரூபித்துவிட்டது. 

என் தொகுதி மக்களின் தேவைகளை தீர்க்கத்தான் என்னை மக்கள் தேர்வு செய்தார்கள். ஆனால் நான் சிறப்பாகவும் சுதந்திரமாகவும் செயல்பட மாவட்டத்தில் நிறைய முட்டுக்கட்டைகள் உள்ளன. தொகுதி பிரச்னை தொடர்பாக பலமுறை மனு கொடுத்தேன். ஆனால் முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை. 

எனவே மக்கள் ஆதரவு உள்ள தினகரனுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன் என பிரபு தெரிவித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் ஆட்சி நடக்க வேண்டுமென்றால் தினகரன் தலைமையில் ஆட்சி செய்ய வேண்டும். எனவே பழனிசாமி அணியில் இருக்கும் எம்.எல்.ஏக்கள் தினகரன் அணிக்கு வந்தால் நன்றாக இருக்கும். ஜெயலலிதா வழியில் கட்சியும் ஆட்சியும் நடக்க வேண்டுமென்றால் சசிகலா மற்றும் தினகரன் கூட இருந்துதான் செயல்பட வேண்டும். இதை உணர்ந்து மற்ற எம்.எல்.ஏக்களும் தினகரன் அணிக்கு வருவார்கள் என பிரபு நம்பிக்கை தெரிவித்தார்.