தமிழ் முழக்கம் சாகுல் அமீதுவின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் கண்கலங்கியது ஆங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கொரோனா தொற்றால்  உயிரிழந்தார். இந்நிலையில் அவரது நினைவேந்தல் கூட்டம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை கே.கே நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான் தான்  ஈழத்திற்கு சென்ற போது தலைவர் பிரபாகரன் யாரெல்லாம் தமிழகத்தில் உணர்வாளர்கள் என்று என்னிடம் கேட்டார் நான் சாகுல் ஹமீது  உள்ளிட்டோரை கூறினேன். தலைவர் என்னிடம் ஒரு மணி நேரம் பேசினால் அதில் கால் மணி நேரம் எம்ஜிஆர் பற்றி மட்டும் தான் பேசுவார். இந்திய ராணுவம் ஈழத்தில் நிலை கொண்டிருந்த பொழுதும் கிட்டுவை அழைத்து 35 லட்சம் பணம் கொடுத்து அனுப்பினார் எம்ஜிஆர் என்று பிரபாகரன் கூறியதாக சீமான் கூறினார். அவருடைய ராணுவத்தை எதிர்த்து நாம் சண்டையிடும் பொழுதும் நமக்கு பணம் தருகிறார் எம்ஜிஆர் என்று பிரபாகரன் சிலிர்த்துக் கூறியதாக சீமான் தெரிவித்தார். 

தான் ஒரு காலத்தில் வீட்டுக்கு கூரை போட வசதி இல்லாததை ஒத்துக்கொண்ட சீமான், பின்னொரு காலத்தில் ஒரு கட்சி துவங்குவோம் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார். மேலும் சாகுல்ஹமீது அவர்களைப் பற்றி பேசும் பொழுது சில இடங்களில் அழுதுகொண்டே பேசினார் அது அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சீமான் எம்ஜிஆர் ஈழத் தமிழர்களுக்கு செய்த உதவி குறித்து பேசி இருப்பது எம்ஜிர் ஆர் தோற்று வித்த அதிமுகவுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.