தமிழன் தன்மானத்துடன் போராட வேண்டுமே தவிர தற்கொலை செய்வேன் என சொல்வது கோழைத்தனம் என தமிழக அனைத்து விவசாயிகளின் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தை அதிமுக எம்பிக்கள் முற்றிலுமாக முடக்கிவிட்டனர். தமிழக அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலுவான குரல்களை எழுப்பிவருகின்றனர்.

இந்நிலையில், பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் இன்று நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், நாடாளுமன்றத்தில் நவநீதகிருஷ்ணன் பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தன்மானத்தோடு போராடுவதே தமிழனின் குணம். எனவே தன்மானத்தோடு போராட வேண்டுமே தவிர தற்கொலை செய்துகொள்வேன் என கூறுவது கோழைத்தனம். அதிமுக எம்பிக்கள் தற்கொலை எல்லாம் செய்துகொள்ள வேண்டாம். முடிந்தால் மத்திய பாஜக அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கட்டும் என தெரிவித்தார்.

அடுத்தகட்ட போராட்டங்களை தமிழக அரசே முன்னெடுக்க வேண்டும். உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இதுதொடர்பாக முடிவெடுக்க வேண்டும். அடுத்ததாக பிரதமர் வீட்டை விவசாயிகள் முற்றுகையிட முடிவு செய்துள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.