பாஜக  தேசிய செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹெச்.ராஜாவுக்கு, தேசிய அளவில் முக்கிய பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாஜவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார். தேசிய அளவில் அக்கட்சி சார்பில் துணை தலைவர்கள் 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை என்பது பரபரப்பாக பேசப்பட்டது. இது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கும் உள்ளானது. குறிப்பாக பாஜக தேசிய செயலாளர் பதவியில் இருந்து ஹெச்.ராஜா விடுவிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பானது. 

புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு ஹெச்.ராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், ‘தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் புதிதாக பொறுப்பேற்கும் தேசிய நிர்வாகிகள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் 2014- 2020ம் ஆண்டு வரை பாஜக தேசிய செயலாளர் பொறுப்பு வகித்து வந்த ஹெச்.ராஜா கட்சி விதிகளுக்கு உட்பட்டே, பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பாஜகவை பொறுத்தவரை ஒருவர் இருமுறைக்கு மேல் அந்தப்பதவியில் நீடிக்க முடியாது. ஆகையால், அவருக்கு தேசிய அளவில் முக்கிய பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.