சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னிலையில் இருப்பதாக பாராட்டி பேசியுள்ளார். அதேபோல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  சக்திவாய்ந்த முதலமைச்சராக இருந்து வருவதாகவும் அவர் பாராட்டினார்.

சக்தி வாய்ந்த முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இருந்து வருகிறார் என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவிலேயே சுகாதாரத் துறையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என்றும் அவர் தமிழக அரசை வெகுவாக பாராட்டி உள்ளார். சென்னை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் இவ்வாறு பேசியுள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா, மழை வெள்ளத்தின் போது அரசு செயல்பட்ட விதம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. ஆனால் எதிர்க்கட்சியான பாஜக அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை, மக்கள் மத்தியில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டது, பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மாநில அரசின் வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதேநேரத்தில் பாஜக ஒரு படி மேலே போய், தமிழகத்தில் நடப்பது இந்து விரோத ஆட்சி என்றும், இந்துக்களுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் என்றும், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்றும், முதல்வர் ஸ்டாலினையும், அவர் தலைமையிலான தமிழக அரசையும் ஆளுநரிடம் குறைகூறி வருகிறது. இது ஒருபுறமிருக்க ஆளுநர் ஆர்.என் ரவி நாகலாந்து மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக காவல்துறை பின்னணி கொண்ட அவர் தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரிவினைவாதத்தை ஒடுக்குவதற்காக நாகலாந்தில் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆளுநரை தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் நோக்கம் என்ன? திமுக அரசை இடையூறு செய்வதற்காகவே ஆர்.என் ரவி தமிழகத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற விமர்சனத்தையும் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூறிவருகின்றன. ஆனால் சிறந்த காவல் அதிகாரியாகவும், உளவுத் துறையில் நிபுணத்துவம் பெற்றவராகவும் விளங்கிய ஆர்.என் ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டது பாதுகாப்பு காரணங்களை உள்ளடக்கியதே தவிர, அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல என்றும் கூறப்பட்டு வருகிறது. இப்படி ஆளுநர் நியமனத்தில் பல்வேறு காரணங்கள், சந்தேகங்கள் இருந்து வந்தாலும், தமிழக அரசுக்கும் ஆளுநருக்கு இடையேயான உறவு சுமுகமாகவே இருந்துவருவதாக தெரிகிறது.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் ராஜ்பவனில் தமிழகத்தில் 20 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் சந்தித்த ஆளுநர்கள் தமிழகத்தில் 20 அரசு பல்கலைக்கழகங்கள் இயங்குவதை சுட்டிக்காட்டி பாராட்டியதுடன், தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றும், அதற்கு வாழ்த்தும் பாராட்டும் கூறியதுடன், மாணவர்களை ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் ஈடுபடுத்தி அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த ஆளுநர் ஆர்.என் ரவி அறிவுறுத்தினார். தமிழகம் உயர் கல்வியில் சிறந்து விளங்குகிறது என்றும் அப்போது அவர் தமிழகத்தை பாராட்டினார். இந்நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ள நிலையில், அதில் ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்த கூட்ட தொடரைத் தொடர்ந்து பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ரவியை, தமிழக சட்டசபை முன்னவரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் உள்ளிட்டோர் சந்தித்து சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர். 

இந்நிலையில் இன்று சென்னை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார் ஆளுநர் ரவி, இந்திய அளவில் சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னிலையில் இருப்பதாக பாராட்டி பேசியுள்ளார். அதேபோல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சக்திவாய்ந்த முதலமைச்சராக இருந்து வருவதாகவும் அவர் பாராட்டினார். ஸ்டாலின் அரசுக்கு இடையூறு கொடுக்க ஆளுநர் நியமிக்கப் பட்டிருக்கிறார் என்றும், அதை ஒட்டியே தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்து தமிழக அரசை குறை கூறி வருகின்றனர் என கூறப்பட்டு வந்த நிலையில் தமிழக ஆளுநர் தமிழக முதலமைச்சரை சக்திவாய்ந்த முதலமைச்சர் என பாராட்டி இருப்பது அதி முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆளுநரின் இந்த பேச்சு தமிழக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதேபோல் ஒரு சிறந்த ஆட்சியாளராக வரலாற்றில் இடம் பெற விரும்பும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செயல்திறன் மிக்க தலைவர் என்று பல சர்வதேச நாளேடுகள் அவரை பாராட்டி புகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் தி எக்கனாமிஸ்ட் ஆங்கில நாளேடு "மீட் திராவிடன் ஸ்டாலின்" என்று எழுதிய சிறப்பு கட்டுரையில் இவ்வாறு புகழாரம் சூட்டியது. லண்டனை தலைமையகமாக கொண்ட அந்த இதழ் இந்தியாவின் தலைவர் வழங்காத செயல்திறனை வழங்கும் தமிழ் நாட்டின் தலைவர் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டது. (ஜூன் 3 2021) அதில் ஸ்டாலின் அவர்கள் கவர்ச்சி அரசியல் செய்வதை காட்டிலும், பட்டறிவின் அடிப்படையில் பொருத்தமான முறையில் சிக்கல்களை அணுகுகிறார். தமிழக அரசியலில் மிகப்பெரும் ஜாம்பவானாக விளங்குகிறார், தொடர்ந்து தமிழ்நாட்டினுடைய செயல்திறன் மிக்க தலைவராக தன்னை நிரூபித்து வருகிறார் என பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.