ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றன. இதில், கட்சியின் சின்னமான இரட்டை இலை யாருக்கு என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால், தேர்தல் ஆணையம் கட்சி சின்னத்தை முடக்கி வைத்துள்ளது.

இதைதொடர்ந்து கட்சி சின்னத்தை மீட்பதற்காக மீண்டும் இரு அணிகளும் இணைய முடிவு செய்துள்ளன. இதற்காக  கடந்த சில நாட்களாக இரு அணிகளும் இணைவதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஆனால், அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரனை, டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி அணியில், செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால், அமைச்சர் ஜெயக்குமாரின் கை ஓங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையொட்டி நிதி அமைச்சராக உள்ள ஜெயக்குமார், அனைத்து அமைச்சர்களையும் பின் தள்ளிவிட்டு, முன்னுக்கு வர நினைப்பதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் வெற்றிபெற்ற ராயபுரம் தொகுதி முழுவதும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து, அதிமுகவினர் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டர்களில், “சசிகலா பெயரை சொல்லி அமைச்சர் பதவி வாங்கிய ஜெயக்குமார், இப்போது சசிகலாவை மறக்கலாமா?, தொடர்ந்து வெற்றிபெற்று தொகுதிக்கு எதுவும் செய்யாத ஜெயக்குமாரை புறக்கணியுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் அதிமுகவினர் இடையே அதிருப்தியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.