குன்னூர் வனப்பகுதிகள் வழியாக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து, தபால் பட்டுவாடா செய்த தபால்காரருக்கு மத்திய ராஜ்ய சபா எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் ஒரு லட்சம் நிதி வழங்கி கவுரவித்துள்ளார்.

தமிழகத்தில் நீலகிரி மாவட்டம், குன்னூர் வண்ணாரப் பேட்டையை சேர்ந்தவர் சிவன். தபால்துறையில் 30 ஆண்டுகளாக பணியாற்றி இவர் ஹில்குரோவ் தபால் நிலையத்தில் 10 ஆண்டுகள் கிராம தபால்காரராக பணியாற்றினார். சிங்காரா, ஹில்குரோவ் ரயில்பாதை, வடுக தோட்டம், கே.என்.ஆர், பழங்குடியின கிராமங்கள், மரப்பாலம் என 15 கி.மீ. தூரம் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள அடர்ந்த வனப்பகுதி வழியாக நடந்தே சென்று தபால்கள், மணியார்டர், பதிவு தபால் பட்டுவாடா செய்ததுடன், சேமிப்பு திட்டம், சிறுசேமிப்பு, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட சேவைகளை செய்து வந்தார். 65 வயதை எட்டிய இவர் மார்ச் 7ம் தேதி ஓய்வு பெற்றார்.

 

இவருக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியான, 'இன்கோ சர்வ்' மேலாண்மை இயக்குநர் சுப்ரியா சாஹூ 'டுவிட்டரில்' பாராட்டுத் தெரிவித்தார். தேசியளவில் பிரபலமான தபால்காரர் சிவனுக்கு, பாராட்டுகள் குவிந்தன. இதில் ராஜ்யசபா எம்.பி., ராஜீவ் சந்திரசேகர், ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கி கவுரவிப்பதாக அறிவித்தார். இவரது இந்தியன் வங்கி கணக்கு எண்ணில், ஒரு லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். முதல் முறையாக ஒரு லட்சம் நிதி வழங்கி கவுரவித்த எம்.பி.க்கு  சிவன் நன்றி தெரிவித்துள்ளார்.