இந்திய தபால்துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில் முதல் தாளுக்கான தேர்வுகள் இனி இந்தி மட்டும் ஆங்கிலத்தில் மட்டும் நடைபெறும் என்றும் இரண்டாம் தாளுக்கான வினாத்தாள் ஆங்கிலத்தில் இருந்து அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்படும் எனவும் மத்திய தொலைத்தொடர்புத் துறை உதவி இயக்குநர் சி.முத்து ராமன், அனைத்து தபால் நிலையங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தார்.. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இது தொடர்பாக  இன்று  மாநிலங்களவையில் பேசிய நவநீதகிருஷ்ணன் மற்றும் திருச்சி சிவா ஆகியோர், தமிழகத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்ட தபால் துறை தேர்வினை ரத்து செய்யவேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் முன்னர் என்ன நிலை இருந்ததோ அதே நிலையை மத்திய அரசு தொடர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசும்போது “இந்தி மட்டும் ஆங்கிலத்தில் தேர்வினை நடத்த வேண்டும் என அனைத்து தபால் நிலையங்களுக்கும் சமீபத்தில் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. 

இது தமிழக மாணவர்களின் கல்வியை பறிக்கும் செயலாகும். இதற்கு முன்னர் இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 

இப்பொழுதே எங்கள் மாணவர்கள் மத்திய அரசு வேலை, குறிப்பாக ரயில்வே துறைகளில் வேலை கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். நாங்கள் மற்ற தேர்வுகளையும் மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். 

மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை கிராமப்புற மாணவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் நடவடிக்கை. அதனால் மத்திய அரசு உடனடியாக இந்த ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் நடத்தப்படும் தேர்வினை ரத்து செய்து, மாநில மொழிகளில் தேர்வினை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

அதே போல் அதிமுக உறுப்பினர் நவநீதிகிருஷ்ணனும் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.