அமைச்சர் மகன்.. சிறைச்சாலை வாசல்.. வைத்திலிங்கம், காமராஜை சேர்த்து வைத்து பேசிய முன்னாள் ஜெ.உதவியாளர்..!
பல தலைவர்களுடைய பிள்ளைகளால் தந்தைக்கு கெட்ட பெயர் வருவது உண்டு. ஆனால், இவர்கள் அதற்கு விதிவிலக்காக இப்படி ஒரு பிள்ளைகளை பெற்றெடுத்ததற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எல்லோரிடமும் நான் எப்போதும் பாராட்டுவதுண்டு.
பல தலைவர்களுடைய பிள்ளைகளால் தந்தைக்கு கெட்ட பெயர் வருவது உண்டு. ஆனால், இவர்கள் அதற்கு விதிவிலக்காக இப்படி ஒரு பிள்ளைகளை பெற்றெடுத்ததற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எல்லோரிடமும் நான் எப்போதும் பாராட்டுவதுண்டு என பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது முகநூல் பக்கத்தில் அதிமுக நிலை குறித்து பல்வேறு பதிவுகளை செய்து வருகிறார். இந்நிலையில், காமராஜ் மகன் திருமணத்தில் பூங்குன்றன் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- திருவாரூர் மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் உணவுத்துறை அமைச்சருமான அன்பிற்குரிய இரா. காமராஜ் அவர்களின் மகன் இன்பன் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். காமராஜ் அவர்களுக்கு இறைவன் கொடுத்த இரண்டு பிள்ளைகளும் முத்துக்கள். தந்தைக்கு அரசியலில் எந்தவித கெட்ட பெயரும் ஏற்படுத்தாமல், தந்தை சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்கும் நல்ல பிள்ளைகள். மூத்தவர் இனியன் அற்புதமான பிள்ளை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெங்களூர் சிறையில் தவித்த போது வெளியில் தவித்துக் கொண்டிருந்த எங்களுக்கு கடைசிவரை துணையாக இருந்தவர்.
சிறைச்சாலை வாசலில் நான் தங்கிய போது என்னோடு தங்கியவர். அமைச்சர் மகன் என்று பார்க்காமல் இந்த வேலைக்காரனோடு உறவாடி எங்களோடு அந்தக் கொடுமையான நாட்களில் கொடுமையை அனுபவித்தவர். ஒரத்தநாடு வைத்திலிங்கம் அவர்களும், காமராஜ் அவர்களும் பிள்ளைகளால் கொடுத்து வைத்தவர்கள். பல தலைவர்களுடைய பிள்ளைகளால் தந்தைக்கு கெட்ட பெயர் வருவது உண்டு. ஆனால், இவர்கள் அதற்கு விதிவிலக்காக இப்படி ஒரு பிள்ளைகளை பெற்றெடுத்ததற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எல்லோரிடமும் நான் எப்போதும் பாராட்டுவதுண்டு.
இனியனும், இன்பனும் பெற்றோர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் எப்போதும் இனிப்பானவர்கள். இந்த பிள்ளைகளை நெறியோடு வளர்த்த தாயை வணங்குகிறேன். இரு பிள்ளைகளும் மருத்துவர்கள். இவர்களுக்கு மனைவியாக வந்தவர்களும் மருத்துவர்கள். நால்வரும் இணைந்து மகத்தான சேவையான மருத்துவ சேவையை ஒன்றுபட்ட தஞ்சை மக்களுக்கு உணர்வோடு வழங்க வேண்டும். அதற்கு இறைவன் துணை நிற்க வேண்டுகிறேன்.
அன்பு தம்பி மணமகன் இன்பன் - மணமகள் ரத்னா தம்பதியினர் பதினாறு பேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும். "செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே' என்ற பாடலில் வருவது போல மண்ணில் பெய்த மழை நீர் மண்ணின் நிறத்தோடு கலந்து நீரின் தன்மையையும், மண்ணின் நிறத்தையும் பிரிக்க முடியாதபடி ஓடுவதைப் போல, உங்கள் உள்ளம் ஒன்றுபட்டு மகிழ்வோடு வாழ்க்கை பாதையில் நீங்கள் ஓட வேண்டும். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டும். அதற்கு இறை அருளும், அம்மாவினுடைய ஆசியும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க மனமார பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.