சாப்பாட்டுக்கே வழியில்லாமல், முன்னாள் எம்பியின் தாய், தங்கை தவிக்கின்றனர். அவர்களுக்கு மாநில, மத்திய அரசோ எவ்வித உதவியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஜலோன் மாவட்டம், கால்பி பகுதியில் உள்ள பேமாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பூலான் தேவி. இவரை, அதே கிராமத்தை சேர்ந்த சிலர் 3 வாரங்களுக்கு ஒரு வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் உள்பட சித்திரவதை செய்தனர்.

பின்னர், இதனால் ஆவேசமடைந்த அவர், ஒரே நாளில் 22 பேரை சுட்டு கொன்றார். இதைதொடர்ந்து, சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் பிரபல கொள்ளைக்காரியாக வலம் வந்தார். பணக்காரர்களிடம் கொள்ளையடித்து, ஏழைகளுக்கு கொடுத்தார்.

இதையடுத்து அவர் போலீசில் சரணடைந்தார். அப்போது, உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைத்த முலாயம் சிங், அவர் மீது இருந்த அனைத்து புகார், குற்றங்களை ரத்து செய்தார். மேலும் பூலான் தேவியை முலாயம்சிங் யாதவ் தனது சமாஜ்வாதி கட்சியில் சேர்த்தார்.

இதைதொடர்ந்து மக்களவை தேர்தலில் உத்தர பிரேத மாநிலம் மிர்சாபூர் தொகுதியிலும் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பூலான் தேவியால், கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரால், கடந்த 2001, ஜூலை 25ம் தேதி தனது வீட்டு வாசலில் கொல்லப்பட்டார்.

முக்கிய தலைவர்கள் விபத்தில் இறந்தாலோ, கொலை செய்யப்பட்டலோ, அந்தந்த கட்சியின் சார்பில் அவரது குடும்பத்தினரை அரசியலில் முன்னிறுத்துவார்கள். ஆனால் பூலான்தேவி விஷயத்தில், அவரது குடும்பத்தினரை சமாஜ்வாதி கட்சியினர் முற்றிலும் மறந்தே போய்விட்டனர்.

இதனால், பூலான்தேவியின் தாய் மல்லா தேவியும், தனது சொந்த கிராமமான ஷேக்புர் குடாவில் தனது கடைசி மகள் ராம்கலி தேவியுடன் வசிக்கிறார். மத்திய அரசின் 100 நாள் திட்ட வேலைக்கு சென்றும், பலரது வீடுகளில் வீட்டு வேலை செய்தும் பிழைக்கிறார்.

இதுகுறித்து பூலான் தேவியின் தங்கை, ராம்கலி தேவி கூறியதாவது:-

 “எனது அக்காள் சம்பல் கொள்ளைக் காரியாகவும், சமாஜ்வாதி கட்சி எம்.பி.யாகவும் இருந்தார். அப்போது அரசியல்வாதிகள் எங்களை தலைக்கு மேல் தூக்கி வைத்து மரியாதை கொடுத்தனர். அந்த மரியாதை இப்போது இல்லை.

எந்தக் கட்சியினரும் எங்களைக் கண்டு கொள்ளதில்லை. கடந்த ஆண்டு எனது தாய் பட்டினியால் சாகும் நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னர், பொதுநல சங்கத்தினர், அவரை காப்பாற்றினர். என் அக்கா பூலான்தேவி உயிருடன் இருந்தபோது எனது சித்தப்பா, எங்களது 8 ஏக்கர் நிலத்தை பறித்து கொண்டார்.

இதற்காக அவர் மீது நாங்கள் தொடர்ந்த வழக்கு, இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த வழக்குக்கு எங்களால் செலவு செய்யவும் முடியவில்லை” என்றார்.