மகாத்மா காந்தியின் 72-ஆவது நினைவு தினத்தை ஒட்டி அவரது உருவபொம்மையை துப்பாக்கியால் சுட்டு மரியாதை செய்தவர்கள் அனைவரும் ஜாமினில் வந்துள்ள நிலையில் அவர்களுக்கு தடபுடல் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மகாத்மா காந்தியின் 72-ஆவது நினைவு தினம், கடந்த ஜனவரி 30 புதன்கிழமையன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. காந்தி சிலைகளுக்கும், அவரது உருவப் படத்திற்கும் பல்வேறு அமைப்பினர் மலரஞ்சலி செலுத்தினர். இதற்கு நேரெதிராக , மகாத்மா காந்தி படுகொலைக்கு காரணமான ‘இந்து மகா சபை’ அமைப்பினர், காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, கொண்டாட்டம் போட்டனர்.  அலிகார் இந்து மகா சபை அலுவலகத்தில், காந்தி உருவப் பொம்மையை வைத்து, அதனை அந்த அமைப்பின் பெண் தலைவர்களில் ஒருவரான குண்டம்மா பூஜா சகுன் பாண்டே துப்பாக்கியால் சுட்டார். அடுத்து வரிசையாக மற்றவர்களும் காந்தி உருவ பொம்மையை சுட்டனர்.

துப்பாக்கி  குண்டு பட்டவுடன், அந்த உருவ பொம்மையில் வைக்கப்பட்டிருந்த சிவப்பான திரவம் வெளியேறியதைப் பார்த்து, ‘நாதுராம் கோட்சே வாழ்க’ என்று கூச்சலிட்டு, ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். பின்னர், காந்தியின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றியும் எரித்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக, இவை அனைத்தையும் வீடியோ எடுத்து, இணையதளத்திலும் வெளியிட்டனர்.

மதவெறிக் கூட்டமான, இந்து மகா சபையின் இந்த அநாகரிகமான செயலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில்,  குண்டம்மா பூஜா சகுன் பாண்டே மற்றும் அவரது கணவர் உட்பட 13 பேர் மீது 147, 148, 149, 295(ஏ), 153(ஊ) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

 அவர்கள் அனைவரும் தற்போது பிணையில் வெளியே வந்துள்ள நிலையில்  காந்தி உருவ பொம்மையை சுட்டுக் கொண்டாடியதற்காக குண்டம்மா பூஜா சகுன் பாண்டே உள்ளிட்டோருக்கு நேற்று (பிப்ரவரி 24) பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. அலிகாரில் நடந்த இந்த பாராட்டு நிகழ்ச்சியில் ஹிந்து மகா சபையின் தேசியத் தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக் கலந்துகொண்டார். காந்தி பொம்மையை சுட்டு சிறை சென்றதற்காக குண்டம்மா பூஜா சகுன் பாண்டேவுக்கு பகவத் கீதை நூலையும், நீண்ட வாளையும் பரிசாக அளித்தார். 30 பேர் இந்த பாராட்டு விழாவில் பங்கேற்றனர்.