கமல் அரசியலுக்கு தகுதியான நபர் என அவரிடம் கூறியதாகவும் நல்ல முடிவை விரைவில் தெரிவிப்பதாக அவர் கூறினார் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலசங்கத்தின் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். இதன் காரணமாக தமிழக அமைச்சர்களின் கடுப்புகளுக்கு அவர் ஆளானார்.

இது தொடர்பாக கமலுக்கும், அமைச்சர்களுக்கும் இடையேயான வார்த்தை மோதல்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. ஊழல் குற்றச்சாட்டு குறித்து பொத்தாம் பொதுவாக கூறக் கூடாது என்று அமைச்சர்களும், ஊழல் குறித்த விவரங்களை அத்துறைக்கு அனுப்புமாறு நடிகர் கமலும் கூறியிருந்தனர்.

இதையடுத்து வார்த்தை போர்கள் ஓய்ந்தபாடு இல்லை என்றே கூறலாம். இந்நிலையில், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலசங்கத்தின் பொன்னுசாமி நடிகர் கமலஹாசனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களை பொன்னுசாமி கமல் அரசியலுக்கு தகுதியான நபர் என அவரிடம் கூறியதாகவும் நல்ல முடிவை விரைவில் தெரிவிப்பதாக அவர் கூறினார் எனவும் தெரிவித்தார்.

கமலும் பால் முகவர் சங்கமும் அரசால் ஒரே மாதிரியாக பாதிக்கப்பட்டுள்ளோம் எனவும் சமூக நலனுக்காக போராடுபவர்களின் நிலை தற்போது முடக்கப்பட்டு வருகிறது எனவும் பொன்னுசாமி தெரிவித்தார்.