சினிமாவில் செல்லாக்காசாகி அரசியலுக்கு வந்தவர் ஜெயலலிதா என ஜானகி முகாமிலிருந்த வளர்மதி அப்போது போட்டு தாக்கியது தற்போது அவரது அரசியல் எதிரிகளால் அந்த கால பேப்பர் கட்டிங்குகளாக வெளியிடப்பட்டன.

இந்நிலையில் ஜானகி அணியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த பொன்னையனும் கடந்த 15 ஆண்டுகளாக 'அம்மா அம்மா' என்று உருகிய பொன்னையனும் ஜெயலலிதாவை வாய்க்கு வந்தபடி பேசி கன்னாபின்னாவென ஏசியுள்ள அந்தகால பத்திரிக்கை செய்திகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1987ஆம் ஆண்டு ஜெ.வை எதிர்த்து ஒரு கூட்டத்தில் பேசிய பொன்னையன் 'ஜெயலலிதா ஒரு கருநாகம் பால்கனியில் நின்று கொண்டு யார் யாருக்கோ கையை ஆட்டியவர்' என அநாகரீகமாக பேசியுள்ளார்.

மேலும் அந்த காலத்தில் அவர் பேசியதாக செய்திதாளில் வெளியான விவரம்,

40 ஆண்டுகாலம் தனது சுய உழைப்பால் பாட்டாளி மக்களையும் ஏழை எளிய மக்களையும் காப்பாற்றியவர் புரட்சி தலைவர்.

கோடானு கோடி மக்களின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட அந்த தலைவன் இயக்கம் கண்டபோது எந்தவித கஷ்டமும் படாதவர்கள், முதல்வர் பதவிக்கு வர ஆசைப்பட்டார்கள்.

அந்த சதியை முறியடித்தோம். அந்த கருநாக பாம்பை அன்றே கண்டுகொண்டோம்.

1980ல் எங்கோ யாருக்கோ டாட்டா காட்டியவர்கள் உடன்கட்டை ஏறப்போகிறேன் என்கிறார்கள். அவர்களைப் பற்றி தமிழகத்து தாய்மார்களுக்கு நன்கு தெரியும். அந்த கருநாகம் எப்படியும் தீண்டிவிடும் என்று கருதித்தான் அதை ஒதுக்கிவைத்தார். சத்யா ஸ்டுடியோவில் அதை அமைச்சர்களிடமும் பொதுக்குழுவினரிடம் தெளிவுபடுத்தியவர் புரட்சித்தலைவர்.அன்றைக்கே 94 எம்எல்ஏக்கள் கையொப்பமிட்டு கருநாகத்தின் மீது நடவடிக்கை எடுங்கள் என்றோம். புரட்சித்தலைவர் படிப்படியாக நடவடிக்கைகளை மேற்கொண்டார். தொலைபேசியைத் துண்டித்தது மட்டுமல்ல. மூலையில் முடக்கி வைத்தார்.கூடுவிட்டு கூடு பாய்கின்ற, குருவிகளை போல் இருந்துவிட்டு பழுத்த மரத்தின் பழுத்த பழத்தை தின்று விட்டு அடுத்த மரம் தாவுகின்ற கேடுகெட்ட ஒழுக்கமில்லா வவ்வால்களை போன்று இருந்தவர்கள், கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரரான பொன்மன செம்மலின் ஈகை குணத்தை பயன்படுத்தி இங்கேயும் நுழைந்தார்கள்.

இவ்வாறு செல்கிறது பொன்னையனின் பேச்சு..