அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் செல்போனையே சாமர்த்தியமாக திருடி சென்றனர் திருடர்கள். இது பற்றி ரகசியமாக விசாரிக்க சொன்ன விஷயம் பகீரங்கமாக வெளியாகியுள்ளது. 

அதிமுக செய்தி தொடர்பாளராக இருந்து சைதாப்பேட்டை தொகுதியில் அமைச்சர் வேட்பாளராக ஜெயலலிதாவால் நிறுத்தப்பட்டு பவர்ஃபுல் வேட்பாளர் மா.சுப்ரமணியத்திடம் தோற்றுப்போனவர் பொன்னையன்.

எம்ஜிஆர் காலத்து அமைச்சர். தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவை முதன் முதலில் சின்னம்மா என்று அழைத்தவர். எந்த பால் போட்டாலும் சிக்சர் அடிக்கும் விராட்கோலி போல் இவர் சமீபத்தில் நடத்திய பிரஸ்மீட்டில் செம்ம தயாரிப்புடன் சென்ற பத்திரிக்கையாளர்களே மயக்கம் போட்டு விழும் வண்ணம் பதில் சொன்னவர். 

விரைவில் சின்னம்மா ஆதரவினால் கட்சியின் தலையாய இடத்திற்கு வருவார் என கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுபவர். இத்தகைய பரபரப்பு அரசியல் வாதியை சுற்றி சமீபகாலமாக கூட்டம் இருக்கும். ஆனால் அதையும் மீறி சாமர்த்தியமாக இவரிடம் கைவரிசையை காட்டியுள்ளான் ஒரு பலே திருடன். 

பொன்னையன் தினமும் காலையில் அண்ணாநகர்  ஒய் பிளாக்கில் உள்ள  தனது வீட்டிலிருந்து கிளம்பி வாக்கிங் சென்றுள்ளார். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் ஓட்டலில் அமர்ந்து தேனீர் அருந்தியுள்ளார். பின்னர் கிளம்பும் போது மேஜையில் வைத்திருந்த தனது விலை உயர்ந்த செல்போனை தேடியபோது அது காணாமல் போயிருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கூறி ரகசியமாக விசாரிக்க சொன்னது தற்போது கசிந்துள்ளது. ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து திருடிய பலே ஆசாமியை பிடிக்க போலீசார் முயற்சி எடுத்து வருகின்றனர்.