ponnayan accuses thambidurai on jaya death
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து ஜெயலலிதா நன்கு குணமடைந்து வருகிறார், நன்கு பேசுகிறார், இட்லி சாப்பிட்டார், வழக்கமான உணவை உட்கொள்கிறார் என அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் பொன்னையன், சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் கூறி வந்தனர்.
ஆனால் டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார்.இதனைத் தொடர்ந்து சசிகலா- ஓபிஎஸ் இடையே நடைபெற்ற அதிகாரப் போட்டியில் ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்து சென்றார்.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் குறித்து ஓபிஎஸ் அணியினர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகீர் தகவலை வெளியிட்டு வருகின்றனர்.
ஓபிஎஸ் வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், போயஸ் கார்டனில் ஜெயலலிதா தாக்கப்பட்டு ரத்தகாயங்களுடன் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தார்.
ஜெயலலிதா தாக்கப்படும்போது அங்கு இருந்த பணிப்பெண் இப்போது எங்கே இருக்கிறார்? என்பதே தெரியவில்லை என குற்றம்சாட்டினார்.

அது மட்டுமல்ல ஜெயலலிதா மருத்துமனையில் இருக்கும்போது அவர் நன்றாக இருக்கிறார், குணமடைந்து வருகிறார், விரைவில் வீடு திரும்புவார், பேப்பர் படிக்கிறார், இட்லி சாப்பிடுகிறார் என்று துணை சபாநாயகர் தம்பிதுரை சொல்லச் சொன்னதைத் தான் நாங்கள் ஊடகங்களில் சொன்னோம் என பகீர் தகவலை வெளியிட்டார்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓபிஎஸ் அணியினர் தெரிவித்து வரும் புதுப் புது தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
