பொங்கல் திருநாள் மீண்டும் “கட்டாய விடுமுறை” பட்டியலில் இடம்பெறும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
தமிழர்களின் உணர்வுடனும், பண்பாட்டுடனும் இரண்டறக் கலந்திருக்கும் பொங்கல் திருநாள் மீண்டும் “கட்டாய விடுமுறை” பட்டியலில் இடம்பெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.
ஆனால் மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாள் கொண்டாட இருந்த நேரத்தில் இப்படியொரு குழப்பத்தை உருவாக்கிய மத்திய அரசின் போக்கை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 14 நாட்கள் “கட்டாய விடுமுறை” என்று பட்டியலில் உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை இங்குள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் திருநாள் மிக முக்கியமானது மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் திருநாள். அந்த வகையில் “மத்திய அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்புக் குழு” பொங்கல் திருநாளை “கட்டாய விடுமுறை” பட்டியலில் சேர்க்கவே பரிந்துரை செய்திருக்க வேண்டும்.
அப்படியே அந்தக் குழு உள்நோக்கத்துடன் பொங்கலை “கட்டாய விடுமுறை” பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசுக்கு பரிந்துரையாக அனுப்பியிருந்தால், அதை மத்திய அரசாவது தமிழர்களின் உணர்வுக்கு மட்டுமின்றி, பொங்கல் திருநாள் கொண்டாடும் அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அந்த பரிந்துரையை ரத்து செய்து “பொங்கல் திருநாளை” கட்டாய விடுமுறை பட்டியலில் தொடர்ந்து நீடிக்கும் என்று உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் “மத்திய அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்புக் குழு” அளித்த பரிந்துரையை அப்படியே மத்திய அரசு ஏற்றுக் கொண்டு செயல்பட்டது தமிழர்களின் உணர்வுகளை கிள்ளுக்கீரையாக நினைப்பதற்கு சமமானது. அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உடனடியாக அதைக் கண்டித்து அறிக்கை விட்டு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 11 ஆம் தேதி காலை கண்டன ஆர்பாட்டம் என் தலைமையில் நடைபெறும் என்று அறிவித்தேன்.
தமிழ் உணர்வுகளை மதிக்கும் அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தன. தமிழகத்தில் கிளர்ந்தெழுத்த எதிர்ப்பை தொடர்ந்து பொங்கல் திருநாளை “கட்டாய விடுமுறை” பட்டியலில் மத்திய அரசு இப்போது மீண்டும் சேர்த்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழக போராட்ட அறிவிப்பிற்கு கிடைத்த வெற்றியாக இதனை கருதி, மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:57 AM IST