நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “விவசாயிகள் பேரெழுச்சியாக டெல்லியில் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி போராடி வருகிறது. அத்தியாவசிய பொருட்களான தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு பொருட்களையே பதுக்குகிறார்கள். அவற்றையெல்லாம் அத்தியாவசியப் பொருட்கள் இல்லை என்று சொல்லி விட்டால் எவ்வளவு பதுக்குவார்கள்? இச்சட்டம் அதற்குதான் வழிவகுக்கிறது.


எடப்பாடியோ, மோடியோ இந்த சட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகளை விளக்க வேண்டியதுதானே? எதிர்க்கிற வகையில் எல்லா சட்டங்களையும் கொண்டு வந்தால் எதிர்க்காமல் என்ன செய்ய முடியும்? அவர்கள் புடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணிதான். மம்தா பானர்ஜி போல உறுதியாக இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டியது அவசியம். எடப்பாடியாவது அமைச்சர் ஆவதற்கு முன்பு விவசாயம் பார்த்தவர். ஆனால், மு.க.ஸ்டாலின் எந்த வகையில் விவசாயி? பதநீருக்கு சர்க்கரை போட்டீர்களா என்று கேட்பவரெல்லாம் விவசாயியா?


 2,500 ரூபாய் பொங்கல் பரிசாக அரசு வழங்க உள்ளதால், தேர்தல் பொங்கலாக இருக்கும். கொரனோவைவிட கொடிய வைரஸ்தான் நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறது. கொரனோவைக் காரணம் காட்டி குளிர்கால கூட்டத் தொடரை ரத்து செய்துவிட்டார்கள். ரஜினியெல்லாம் அரசியல் செய்ய மாட்டார். அவர் நேரடியாக தேர்தலுக்குத்தான் வருவார்” என்று தெரிவித்தார்.