ரூ.2,500 பொங்கல் பரிசு டோக்கனை ஆளுங்கட்சியினர் விநியோகிப்பதை எதிர்த்து திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை  அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகை பரிசுத் தொகுப்புடன் ரூ. 2,500 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதற்கான டோக்கன்கள் வீடுதோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், பொங்கல் பண்டிகை பரிசு டோக்கன்களை அதிமுகவினர் தருவதாக திமுக எம்எல்ஏ ஆர்.எஸ்.பாரதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், ஆளுங்கட்சியினர் டோக்கன் வழங்குவதால் பரிசுத்தொகை பெரும்பாலானோருக்கு கிடைக்காத சூழல் ஏற்படுகிறது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

 பரிசுத்தொகை டோக்கனில் அதிமுக தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது தவறானது என்றும், இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால், பொங்கல் பொங்கல் பரிசு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.