Asianet News Tamil

ஊருக்கு போறவங்களுக்கு தயவு செய்து இதை பண்ணுங்க..! அரசுக்கு ஐடியா கூறும் பொன்னார்..!

இரண்டு இடங்களில் சோதனை நடத்தப்பட வேண்டும், முதல் சோதனை புறப்படும் இடத்தில் சோதனை நடத்தப்பட்டு அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொடுக்கப்பட்ட பின்பு தான் அவர் புறப்படுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும், மற்றொன்று அவர் பயணித்த நேரத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா எனத்தெரிந்துகொள்ள அவர் சென்ற மாவட்டத்தில் சோதனை செய்ய வேண்டும்

pon.radhakrishnans idea about testing corona for people who are traveling to native
Author
Kanyakumari, First Published May 15, 2020, 8:08 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சொந்த ஊர்களுக்கு செல்ல நினைப்பவர்களுக்கு இருக்கின்ற இடத்திலும் சென்று சேர்கின்ற இடத்திலும் பரிசோதனைகள் நடத்தலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகை உலுக்கிக் கொண்டிருக்கின்ற கரோனா கொடிய நோயிலிருந்து நமது நாட்டை மீட்கக்கூடிய வகையில் நம்முடைய பிரதமர் மோடியும், தமிழகத்தினுடைய முதல்வரும், தமிழக அரசும், அதேபோல பிற மாநிலங்களினுடைய முதல்வர்களும் திறம்படச் செயல்பட்டு வருகின்றார்கள். மிக முக்கியமான காலகட்டத்தை நாம் கடந்து கொள்ளக்கூடிய நிலையில் இருந்துகொண்டு இருக்கின்றோம். மூன்று முறை சுயக் கட்டுப்பாடோடு கூடிய விலகலை நாம் கடைப்பிடித்து வருகின்றோம்.

இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்களுடைய சொந்த பகுதியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு வேலைக்குச் சென்றவர்கள், அங்கே வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஏறக்குறைய 50 நாட்கள் அவர்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக்கொண்டு, தனிமைப்படுத்திக்கொண்டு இருந்த காரணத்தினாலும், சில பகுதிகளில் வேகமாக கரோனா பரவக்கூடிய செய்திகள் வருகின்றன.

அவர்களுடைய சொந்தங்களை, பெற்றோரை, மனைவி மக்களை, குடும்பத்தாரைச் சேரும் போது, எங்கே தன்னுடைய சொந்தத்திற்கும் இந்த பாதிப்பு வந்துவிடுமோ என்று சொந்த ஊரில் இருக்கும் அவர்கள் அச்சத்தில் இருக்கக்கூடிய காட்சியும், மற்றொருபுறம் பிழைப்புக்காக வேலைக்காகச் சென்றவர்கள் தங்கள் பகுதியில் பரவி வரும் நோய் தங்களைத் தாக்கிவிடும் என்கின்ற அச்சமும் மற்றொரு புறம் தங்கள் குடும்பத்தார் இருக்கும் தங்கள் சொந்தப் பகுதியில் இந்த நோயின் காரணமாக தங்கள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுவிடும் என்கின்ற அச்சமும் தொடர்ந்து ஏற்பட்ட காரணத்தினால் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் விரும்புகிறார்கள். இதில் எந்தத் தவறும் கிடையாது. இது ஏற்றுக்கொள்ளக் கூடிய விஷயம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, உதாரணத்திற்கு சென்னை போன்ற பெருநகரங்கள், நகராட்சிகள், கரோனா அதிகமாக பாதித்துள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள், வேலைக்காக அங்கு சென்றவர்கள் தங்கள் சொந்த மாவட்டம், சொந்த ஊருக்குச் செல்ல விரும்பி வரும்போது, வரவேற்க மனம் நிறைந்த ஆசை சொந்தங்களுக்கு இருந்தாலும் கூட, வருபவர் நோயைக் கொண்டு வந்து விடுவாரோ என்ற அச்சம் தங்களையும் அறியாமல் மேலோங்கி நின்று கொண்டிருக்கிறது.

அது உண்மையும் கூட. ஊரே வரவேற்ற ஒரு மனிதனை பார்த்து ஊர் அச்சப்பட்டு, இவர் இப்போது வந்திருக்க வேண்டுமா என்ற கேள்வி மனதில் எழுப்பியிருப்பது உண்மை. இது மனிதன், சாதி, மதம் என்றெல்லாம் இல்லை. இது பொதுவாக இருக்கும் நிலை. ஒரு உதாரணம் சொல்கின்றேன். சென்னையில் இருந்து புறப்பட்டு இன்னொரு சொந்த மாவட்டத்திற்கு சொந்தங்களைப் பார்க்க வேண்டும் என்று வரக்கூடிய ஒரு மனிதர், அவரை வரவேற்பதற்கு உறவுகள் தயாராக இருந்து கொண்டிருக்கின்றன, அப்படி வரும்போது மாவட்டத்தின் எல்லையிலேயே அவர் தடுக்கப்பட்டு, கரோனா தொற்று நோய் இருக்கிறதா என்பது பார்க்கப்படுகிறது. இது சரியான ஒன்று. பாதிப்பு இல்லை என்று சொன்னால் 1 நாள் அல்லது 2 நாள் ஓரிடத்தில் தங்க வைக்கப்பட்டு, அதிலும் பாதிப்பும் இல்லை என்று சொன்னால் அவர் ஊருக்கு அனுப்பப்படுகிறார். சொந்தங்களோடு சேர அனுமதிக்கப்படுகின்றார். அது இல்லாமல் அவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு விட்டது என்று சொன்னால், தனிமைப்படுத்துவதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். 14 நாட்கள் அங்கே வைக்கப்படுகின்றார்.

தப்பி தவறி வரும்போது கரோனா இல்லாமல் வந்த பின் அவருக்கு அந்த நோய் வந்து, அவரை மருத்துவமனையில் சேர்க்கும் சூழல் ஏற்படுகின்றது என்று சொன்னால் அந்த ஊரை சேர்ந்த யாரிடமெல்லாம் பழகினாரோ அவர்கள் அத்தனை பேருக்கும் சோதனை நடத்தப்படுகிறது, அவர் மூலமாக தொற்று ஏற்பட்டவர்கள் அவர்களும் தனிமைப் படுத்தப்படுகிறார்கள், வருத்தப்படும் அளவுக்கு சூழ்நிலைகள் வருகின்றன. இந்த நிலையை தவிர்ப்பதற்காக என்னுடைய யோசனையை தமிழக அரசுக்கு நான் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றேன். தமிழ அரசும், சுகாதாரத் துறை, காவல் துறை, யாரெல்லாம் தங்கள் சொந்த ஊருக்குப் போக வேண்டும் என்று மனு செய்து அவர்கள் தயாராக இருக்கிறார்களோ, அவர்களுக்கு இந்த தொற்று நோய் இருக்கிறதா என்பதை அவர்கள் இருக்கக்கூடிய பகுதி, உதாரணமாக சென்னையைச் சேர்ந்தவர் மதுரைக்கு வர வேண்டுமென்றால், கன்னியாகுமரிக்கு வரவேண்டும் என்று சொன்னால், விண்ணப்பித்த உடனடியாகவே அவர் பரிசோதனைக்கு ஆளாக்கப்பட்ட வேண்டும்.

நோய்த்தொற்று இல்லை என்று சொன்னால் அவர் தன்னுடைய பயணத்தைத் தொடர்வதற்கு அனுமதி கொடுக்கலாம், விதிமுறைகளுக்கு உட்பட்டு. நோய்த்தொற்று இருக்குமானால் சென்னையிலேயே சிகிச்சை பெறக் கூடிய அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தேவையற்ற வகையில் ஒருவர் அச்சுறுத்தப்படுகிறார், தன்னையுமறியாமல் அவர் அவமானப்படுத்தப்பட்டதாக அவர் உணர்கின்றார். இதுபோன்ற சிக்கல்கள் இல்லாமல் இருப்பதற்காக, விண்ணப்பத்தோடு கூடிய கரோனா தொற்று சோதனைகள் அவர் எங்கிருந்து புறப்பட விரும்புகின்றாரோ அங்கேயே நடத்தப்படவேண்டும். அவர் பயணத்திற்குப் புறப்பட்டு விட்டார் என்று சொன்னால் தடையற்ற வகையில் தன்னுடைய ஊருக்குச் செல்லக்கூடிய அளவுக்கு கவனிக்க வேண்டும். அவர் தன்னுடைய மாவட்டத்திற்கு செல்லும் போது சோதனை செய்யக்கூடாது என்று சொல்லவில்லை.

எடுக்கலாம், ஆனால் ஏற்கெனவே அவருக்கு நோய்த்தோற்று இல்லை என்ற சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கும் என்று சொன்னால் அதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, அவர் பயணிக்கும் நேரத்தில் ஒரு வேளை அவருக்கு நோய்த்தோற்று வந்திருக்கும் என்று சொன்னால் அவரைத் தனிமைப்படுத்துவது தவறு அல்ல. ஆகவே இரண்டு இடங்களில் சோதனை நடத்தப்பட வேண்டும், முதல் சோதனை புறப்படும் இடத்தில் சோதனை நடத்தப்பட்டு அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொடுக்கப்பட்ட பின்பு தான் அவர் புறப்படுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும், மற்றொன்று அவர் பயணித்த நேரத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா எனத்தெரிந்துகொள்ள அவர் சென்ற மாவட்டத்தில் சோதனை செய்ய வேண்டும் என்பது என் கருத்து. இது அவருக்கும் நல்லது, அவர் செல்லும் ஊருக்கும் நல்லது, பயணம் செய்த பகுதியில் இருக்கக்கூடிய எல்லோருக்கும் நல்லது. இதை தமிழ்நாடு அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios