pon radhakrishnan says that TN parties have no legs

தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் கால் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டி உள்ளார். 

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது ஊர் அறிந்த விசயம். பன்னீர்செல்வம் வசம் இருந்த முதல் அமைச்சர் நாற்காலி, தற்போது எடப்பாடி பழனிச்சாமியிடம் உள்ளது.

முதல் அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது, எந்தெந்த திட்டங்களை எதிர்த்தாரோ அதனை ஓ.பி.எஸ்சும் சரி, தற்போது இருக்கும் ஈ.பி.எஸ்சும் சரி, அமல்படுத்தி விட்டனர்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் தமிழகத்திற்கு எதிரானது என்று ஜெயலலிதா சொன்னார். ஆனால் அவர் வழிவந்த தற்போதைய அரசோ அச்சட்டம் தமிழகத்திற்கு நல்லது என்று கூறி அமல்படுத்தி விட்டது. 

இதனை எல்லாம் உற்றுநோக்கும் போது தமிழக அரசை மோடி அரசு இயக்குகிறதோ என்ற எண்ணம் எழுவது மிக இயல்பானதே...

ஆனால் இதனை அன்று முதல் இன்று வரை தொடர்ந்து மறுத்துவரும் பா.ஜ.க. பின்வாசல் வழியாக வர வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். 

இந்தச் சூழலில் தமிழக அரசியலில் பா.ஜ.க.வால் காலூன்றவே முடியாது என்ற விமர்சனத்திற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் கால் இல்லை என்றும், காலூன்றிய திமுகவும் காலை இழந்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.