முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் திருச்செந்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகள் மக்கள் மத்தியில் மிகப் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தி உள்ளன. உலகமே மோடியின் ஒவ்வொரு வார்த்தைகளையும் கவனிக்க ஆரம்பித்துள்ளது.  ‘உலகை வென்ற இந்தியா’ என்று எதிர்காலத்தில் பெயர் பெறும் அளவுக்கு மோடியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.


வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கின்றார்கள். ஆனால், வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் திட்டம். இடைத்தரகர்கள் மத்தியில் சிக்கி விவசாயிகள் சீரழியக் கூடாது. விவசாயிகள் கஷ்டப்பட்டு பொருட்களை விளைய வைப்பார்கள். ஆனால் சந்தைக்கு போகும் போது அந்த விலை விவசாயிகளுக்கு கிடைக்காது. ஆனால், இந்தச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் விளைப் பொருட்களை விளைவித்து அவர்கள் செய்த செலவுக்கு மேல் லாபம் ஈட்டக்கூடிய அளவுக்கு அவர்கள் பொருட்களை விற்க முடியும்.

 
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் எதிர்காலத்திலும் விவசாயிகள் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. அரசியலுக்காக பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள். ஆனால், அந்த சட்டங்களின் பயன்களை விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்வோம். அப்போது விவசாயிகள் அதை ஏற்றுக் கொள்வார்கள்.” என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.