தமிழகத்தில் ஹைடிரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று ஒரு மாதத்திற்கும் மேலாக நெடுவாசல் மக்கள் போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தின் பல்வேறு தரப்பினரும் அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால், அது ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு நிகரான முக்கியத்துவத்தை பெற்றது.

இதையடுத்து மத்திய அமைச்சர் பொன்னார், எச்.ராஜா உள்ளிட்ட பிரமுகர்கள் அவர்களை சந்தித்து, மக்களுக்கு விருப்பம் இல்லாத திட்டங்கள் செயல்பாட்டுக்கு வராது என்று உறுதியளித்தனர்.

மேலும், மத்திய, மாநில அரசுகளின் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டதை அடுத்து, நெடுவாசல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தின்  நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைடிரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம், பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான முன்னிலையில் கையெழுத்து ஆகி உள்ளது.

இதையடுத்து, நெடுவாசலில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தைப் பாலைவனமாக்கும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2 லட்சம் மக்கள் திரண்டு போராட்டம் நடத்துவோம் என நெடுவாசல் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்துவதற்கு எங்களின் உயிரையும் கொடுப்போம் என்றும் விவசாயிகள் ஆவேசமாக கூறுகின்றனர். 

ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டம் எக்காரணத்தைக் கொண்டும் கைவிடப்படாது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான உறுதிபட கூறியுள்ளார். 

ஆனால், இது வெறும் கையெழுத்துதான். இதனால் விவசாயிகள் குழப்பம் அடைய வேண்டாம் என்று பூசி மெழுகுகிறார் மத்திய அமைச்சர் பொன்னார்.

ஒரு கையெழுத்து, தலை எழுத்தையே மாற்றும் என்று மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவருக்கு தெரியாதா என்ன?

அவரது இந்த விளக்கத்தை கண்டித்து, வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வில்லன் நடிகர் நம்பியார் சொல்வது போல "மிஸ்டர் பொன்னார், உங்க வீட்டை என் பேருக்கு மாத்தி ஒரு கையெழுத்து மட்டும் போடுங்க. வீட்டையெல்லாம் நான் எடுத்துக்க மாட்டேன். வெறும் கையெழுத்துதான், குழப்பம் வேண்டாம்" என்பது போன்ற மீம்ஸ்கள் பரபரப்பாக வலம் வந்துகொண்டு இருக்கின்றன.