சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். ஆனால், முதல்வர் வேட்பாளரை கூட்டணிதான் முடிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். மேலும் பாஜக மேலிடம்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்றும் பாஜக தரப்பில் கருத்துகள் வெளியாகின. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொள்வோர் மட்டுமே அதிமுக கூட்டணியில் இருக்க முடியும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி  தெரிவித்தார்.


இதுதொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்களை இன்று சந்தித்த பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி கூறியுள்ளார். அவர் அப்படி சொல்வதில் தவறு கிடையாது. அதிமுக - பாஜக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. நாங்கள் ஒன்றாகவே இருக்கிறோம். சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து எங்கள் கட்சியின் மேலிடம்தான் முடிவெடுக்கும். தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் எங்கள் கூட்டணி உள்ளது. சசிகலா வருகைக்குப்பிறகு அதிமுகவில் மாற்றம் ஏற்படுமா என்பதை அப்போது பார்த்துக்கொள்வோம்.” என்று தெரிவித்தார்.