காவிரி விவகாரத்தில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோருக்கு மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சவால் விடுத்துள்ளார்.

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு, அரசியல் கட்சிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர். ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பில், மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை இல்லை என்பதை சுட்டிக்காட்டி, மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

இதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அதிகாரமில்லாத மேற்பார்வை ஆணையத்தால் பலனில்லை என்றும் மேலாண்மை வாரியம் தான் அமைக்கப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசர், தினகரன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மாநில அரசுக்கு ஸ்டாலின் அழுத்தம் கொடுத்து வருகிறார். ஈரோட்டில் நடந்த திமுக மண்டல மாநாட்டில் கூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் திமுக சார்பில் வலுவான குரல் எழுப்பப்படுகிறது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், ஸ்டாலினும் திருநாவுக்கரசரும் நேரில் சென்று பேசி சம்மதம் பெற வேண்டும். தமிழக அரசின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை பெங்களூருவிற்கு அனுப்பிவைக்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

பெங்களூருவுக்கு செல்ல அவர்களுக்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து தருகிறோம். அங்கு செல்வதற்கு ஸ்டாலினும் திருநாவுக்கரசரும் தயாரா என பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.