தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தற்போது தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக பதவி ஏற்றதன் மூலம் அவர் எக்ஸ்எல்என்சி எனப்படும் மேதகு பட்டத்திற்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார்.

ஆளுநர் பதவி என்பது  சாதாரண விஷயம் கிடையாது. அதுவும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹைதராபாத் நிஜாம் ஆண்ட பகுதியிலுள்ள தெலுங்கானா மாநிலத்தின் இரண்டாவது ஆளுநராக பதவி ஏற்பது நிச்சயம் வரலாற்று சம்பவம் ஆகும்.

அதுமட்டுமின்றி ஒரு மாநிலத்தின் முதல்வரையும் அமைச்சர்களையும் ஒட்டுமொத்த மாநில நிர்வாகத்தையும் ஆட்டிப் படைக்கக் கூடிய சர்வ அதிகாரம் கொண்ட பதவி என்பதால் மரியாதைக்கு ஒருதுளி கூட குறைவு இருக்க வாய்ப்பில்லை.

அந்த அளவிற்கு டாக்டர் தமிழிசைக்கும் இனி மரியாதை; அதுவும் முதல் மரியாதை செல்லுமிடமெல்லாம் கொடிகட்டிப் பறக்கும்... இதைவிட ஒரு மனிதன் வாழ்நாளில் என்ன சாதித்து விடப் போகிறார் என்பதுதான் சாதிக்க துடிக்கும் பல பேரின் எண்ணமாக உள்ளது.

சரி இது ஒருபுறம் இருக்கட்டும் அரசியலுக்கு வருவோம்.. டாக்டர் தமிழிசை தெலுங்கானா மாநில ஆளுநராக போகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடனே அதிகம் அதிர்ந்து போனவர்கள் என்னவோ அதே கட்சியைச் சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணனும், வானதி சீனிவாசனும் தான் என்கிறார்கள் உள்கட்சி விவகாரத்தை நன்கு அறிந்தவர்கள். ஏனென்றால் இதன் பின்னணி இன்று நேற்று வந்ததல்ல பத்து ஆண்டுகளுக்கும் மேலான நீறுபூத்த நெருப்பு போன்ற ஒரு ஊர் கட்சி அரசியல் பகை என்றே சொல்லுகிறார்கள். 90களில் தமிழிசை பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்ததிலிருந்து அவரது சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரும் அதே சமூகத்தைச் சேர்ந்த வருமான பொன் ராதாகிருஷ்ணனுக்கும்  ஏழாம் பொருத்தம் ஆகிப்போனது.

தமிழிசை சௌந்தர்ராஜன் வடசென்னை பகுதியை தேர்ந்தெடுத்து தொடர்ந்து அப்பகுதி மக்களின் உரிமைகளுக்காகவும் சிறுசிறு பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்து தெருவில் நின்று தொடர்ந்து போராடி வந்தார். அதுமட்டுமின்றி பிரபல அரசியல்வாதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது ஒரு பக்கம், மற்றொரு பக்கம் தனது கணவர் டாக்டர் சௌந்தரராஜனின் நண்பர்கள் ஒரு பக்கம் சேர்ந்து தமிழிசைக்காக  சத்தமின்றி  லாபி செய்து தோள் கொடுத்து வந்தனர்.

தமிழிசையின் உழைப்பும் சௌந்தரராஜனின் விவிஐபி நண்பர்களும் மெதுவாக கை கொடுக்க ஆரம்பித்தது. அந்த நேரத்தில்தான் இதையெல்லாம் அறிந்து கொண்ட பொன் ராதாகிருஷ்ணன் அவருக்கு நேர் எதிர் அரசியல் செய்யத் தொடங்கினார். குறிப்பாக பொன் ராதாகிருஷ்ணன் மாநில தலைவராக இருந்தபோது தமிழிசை சௌந்தரராஜன் அனைத்து விஷயங்களிலும் கட்டம் கட்டி ஓரம் கட்டப்பட்டு எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு அசிங்கப்படுத்தி வந்தார் என்பது கமலாலய வட்டாரத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் அறிந்த ஒன்றாகும். 

பொன் ராதாகிருஷ்ணன்  தமிழிசையை ஓரம்கட்டும் நாடகத்திற்கு முழுவதுமாக தோள் கொடுத்தவர் தற்போதைய டிவி பிரபலமான பாஜக தமிழக தலைவர்களில் ஒருவருமான வானதி சீனிவாசன் அவர் பொன் ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

எவ்வளவு முடியுமோ தன் பங்குக்கு தமிழிசையை ஓரம் கட்டும் பணிகளை வானதி சீனிவாசன் போன்றவர்களுடன் சேர்ந்து செய்தார். பொன் ராதாகிருஷ்ணனின் இந்த தொடர் குடைச்சல்களால் நொந்து போன தமிழிசை ஒருகட்டத்தில் அரசியலை விட்டே விலகி விடலாமா என்றும் முடிவெடுத்திருந்தார். அந்த நிலையில்தான் தமிழிசையின் தொடர் உழைப்பு உளவுத்துறையின் அறிக்கை.... தனது கணவரின் நண்பரான விவிஐபி சூப்பர் நடிகரின் சிபாரிசு என அனைத்தும் சேர்ந்து தமிழிசையை தமிழக பாஜக தலைவர் ஆக்கியது. அப்போதே நொந்து நூடுல்ஸ் ஆகிப்போன பொன் ராதாகிருஷ்ணன், பின்னர் மத்திய அமைச்சர் ஆனதால் தனது வேலையை பார்க்க டெல்லிக்கு போய்விட்டார் அப்போதும் சிறுசிறு பிரச்சனைகளோடு தான் தமிழிசை பணிபுரிந்து வந்தார்.

 இந்த நிலையில்தான் தனது தலைவர் பதவி முடியும் தருவாயில் ஜாக்பாட் அறிவிப்பாக மோடியும் அமித் ஷாவும் தமிழிசையை தெலுங்கானா மாநிலமாக ஆளுநராக அறிவிக்க வைத்தனர். தன்னை ஆளுநராக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த பொன் ராதாகிருஷ்ணனுக்கு இது ஏமாற்றத்தை கொடுத்ததோடு மட்டுமின்றி தனது உள்கட்சி அரசியல் எதிரியான தமிழிசை ஆளுநர் ஆனதை ஜீரணிக்க முடியவில்லை. இதே நிலைமை தான் வானதி சீனிவாசனுக்கும்.... திமுகவும் அதிமுகவும்.. காங்கிரஸ் கம்யூனிஸ்ட்.. எந்த கட்சியாக இருந்தால் என்ன?? அரசியல் என்றால் அரசியல் தானே இதில் எதிர்க்கட்சி என்ன?? உள்கட்சி என்ன??